Wednesday, December 07, 2005

முருங்கைக் கீரை அடை

கீரைகளில் இரும்புச் சத்து நிறைந்தது முருங்கைக் கீரை. உணவில் பயன்படுத்துவது மிகவும் நன்று. முருங்கைக் கீரை அடை செய்ய எளிமையான வண்ணமயமான அடை.

தேவையான பொருட்கள்
முருங்கைக் கீரை - ஒன்றரை பங்கு (கட்டின் அளவு ஊருருக்கு வேறுபடும். ஆகவே தேவையான அளவு).
துவரம் பருப்பு - ஒரு பங்கு
கடலைப் பருப்பு - ஒரு பங்கு
உளுந்தம் பருப்பு - கால் பங்கு
பச்சரிசி - அரைக்கால் பங்கு
வெங்காயம் - பெரியது ஒன்று
பச்சை மிளகாய் - தேவைக்கேற்ப
ஜீரகம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

1. பருப்புகளையும் அரிசியையும் ஒன்றாக ஊறப் போடவும். வெந்தயத்தையும் கூடச் சேர்க்கவும்.

2. முருங்கைக் கீரையை இலையிலையாக ஆய்ந்து அலசிக் கொள்ளவும்.

3. வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

4. ஊறிய பருப்பு, நறுக்கிய வெங்காயம், காம்பு நீக்கிய மிளகாய், ஆய்ந்து அலவிய கீரை, ஜீரகம், உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும். நல்ல மைப்பதத்துக்கும் அரைக்கலாம். எதக்கலும் குதக்கலுமாகவும் அரைக்கலாம்.

5. அரைத்த மாவு சற்றே பச்சை நிறத்தில் இருக்கும். அந்த மாவில் தோசை ஊற்றுவது போல சுட்டு எடுக்கவும். சுடச்சுட முருங்கைக் கீரை அடை தயார்.

இதை வெல்லம், வெங்காய்த் துவையல், தக்காளித் துவையலோடு சேர்த்துச் சாப்பிட சுவை கூடும். முருங்கைக் கீரை கிடைக்காத வேளைகளில் பொன்னாங்கன்னிக் கீரையையும் அரைக்கீரை, தண்டுக்கீரை போன்றவைகளையும் பயன்படுத்தலாம். பருப்பு நிறைய இருப்பதால் புரதச் சத்து நிறைந்த உணவு இது. பச்சை அடை என்று சொல்லியும் கீரை சாப்பிடாத குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

அன்புடன்,
கோ.இராகவன்

20 comments:

said...

கோ.இராகவன், தொடர்ந்து எழுதுங்கள் வாரம் ஒரு குறிப்பு கொடுக்க முயற்சி செய்யுங்கள்.
தேசிகன்
http://www.desikan.com/blogcms/

said...

// கோ.இராகவன், தொடர்ந்து எழுதுங்கள் வாரம் ஒரு குறிப்பு கொடுக்க முயற்சி செய்யுங்கள்.
தேசிகன் //

நன்றி தேசிகன். முடிந்த வரையில் வாரம் ஒன்று கொடுக்கின்றேன். :-)

இதைச் செய்து பார்த்து விட்டு கருத்துகளைச் சொல்லுங்கள்.

said...

கோ.இராகவன்,
இந்த குறிப்பு எனக்கு ஏற்கனவே தெரியும் :-). நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம்.

said...

நீங்கள் பெங்களூரில் இருக்கிறீர்களா ? உங்கள் தொலைபேசி எண்ணை எனக்கு தனிமடலில் அனுப்ப முடியுமா ?

desikann at gmail dot com

said...

//முருங்கைக் கீரை அடை//

இரும்புச் சத்து நிறைந்தது முருங்கைக் கீரை மற்றும் பொன்னாங்கன்னிக் கீரை.

தொடர்ந்து நாற்பது நாட்கள் இந்தக் கீரைகளைச் (சமைத்து!) சாப்பிட்டு வந்தால் உடம்பில் தலைச்சத்து, மணிச்சத்து மற்றும் இரும்புச் சத்து மிகுந்து உடல் வலிமையும் வனப்பும் பெறும்!

பெருசாப் போட்டா அடை!

சிறுசாப் போட்டா வடை!!

:-)))

said...

அட இந்த அடை நல்லா இருக்கும் போல இருக்கே. எங்க வீட்டில இந்த கீரை மட்டும் இல்லாம இதே மாதிரி அடை செய்வாங்க. அடுத்த முறை அடை செய்றப்ப கீரைய சேர்க்கச் சொல்லவேண்டியது தான் :-)

said...

// கோ.இராகவன்,
இந்த குறிப்பு எனக்கு ஏற்கனவே தெரியும் :-). நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம். //

ஓ தெரிந்த குறிப்புதானா...அப்ப மத்தவங்க இதைக் கண்டிப்பா முயற்சி செஞ்சி பாப்பாங்க.

said...

// தொடர்ந்து நாற்பது நாட்கள் இந்தக் கீரைகளைச் (சமைத்து!) சாப்பிட்டு வந்தால் உடம்பில் தலைச்சத்து, மணிச்சத்து மற்றும் இரும்புச் சத்து மிகுந்து உடல் வலிமையும் வனப்பும் பெறும்! //

ஞானபீடம்....சூப்பரப்பு

// பெருசாப் போட்டா அடை!

சிறுசாப் போட்டா வடை!! //

இது டச். பின்னூட்டத்துலயும் டச்சா!

said...

// அடுத்த முறை அடை செய்றப்ப கீரைய சேர்க்கச் சொல்லவேண்டியது தான் :-) //

அதுக்கு முன்னாடி கோதுமைரவைக் கதம்பம் செய்யச் சொல்லுங்க. :-))

said...

பார்க்கலாம். ரவை எந்த ரவையாய் இருந்தாலும் எனக்கு அலர்ஜி தான் :-)

said...

Microwave Oven ல மட்டும் சமைக்க முடியற குறிப்புகள் எதாவது எழுதினால் உங்களுக்கு புண்ணியமா போகும் :). என்னிடம் அது மட்டும் தான் இருக்கிறது இப்போதைக்கு ;(.

சுகா

said...

குறிப்புகள் எல்லாம் நல்லா இருக்கு.. ஏதாவது பைவ் ஸ்டார் ஹோட்டல்ல செப்பா வேலை செய்றீங்களா??

said...

முருங்கைக்கீரையா? அய்யோ எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

இந்த அடை செய்யறப்ப , கீரையைப் போட்டு அரைக்காமலேயே, மாவுலே கலந்துட்டு செய்வோம்.
அங்கங்கே பச்சையா இருக்கும்.

இதே கீரையை ராகி மாவுலே, பொடியா அரிஞ்ச வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு
கலந்து கெட்டியாச் சப்பாத்தி மாவு மாதிரி பிசைஞ்சு கையாலெயே ரொட்டி மாதிரி தட்டி,
தோசைக்கல்லுலே போட்டு சுத்திவர எண்ணெய் கொஞ்சம் ஊத்திச் சுட்டுச் சாப்பிட்டாலும்...
ஆஹா....

நண்பர் ஒருத்தர் முருங்கைக் கீரைய நல்லா காயவச்சு மலேசியாவுலே இருந்து கொண்டுவந்து தந்தார்.
அதையும் விடாம பருப்புபோட்டுச் சமைச்சு முழுங்குனேன்.


பாருங்க ராகவன், பூன்ஸ்க்கு எந்த மாதிரியான சந்தேகம் எல்லாம் வருதுன்னு?:-)

said...

// குறிப்புகள் எல்லாம் நல்லா இருக்கு.. ஏதாவது பைவ் ஸ்டார் ஹோட்டல்ல செப்பா வேலை செய்றீங்களா?? //

பொன்ஸ், ருசிச்சி ருசிச்சித் திங்க....எங்கூடவே ஒன்னு இருக்கே........ஓட்ஸ் கஞ்சி வெச்சாக்கூட அதையும் ருசிச்சிச் சாப்பிடுது...அட! நாக்கத்தாங்க சொல்றேன். அதுக்காகதான் இத்தன பாடு.

said...

// முருங்கைக்கீரையா? அய்யோ எனக்கு ரொம்பப் பிடிக்கும். //

எனக்குந்தான் டீச்சர். தூத்துக்குடீல வீட்டுக்குப் பின்னாடி முருங்கமரம் இருந்ததாலோ என்னவொ...எனக்கும் ரொம்பப் பிடிக்கும்.

// இந்த அடை செய்யறப்ப , கீரையைப் போட்டு அரைக்காமலேயே, மாவுலே கலந்துட்டு செய்வோம். அங்கங்கே பச்சையா இருக்கும். //

ஆமா. அதுவும் சாப்பிட்டிருக்கேன். அது அங்கங்க மட்டும் பச்சையா இருக்கும். இது எங்கயுமே பச்சையாத்தான் இருக்கும்.

// இதே கீரையை ராகி மாவுலே, பொடியா அரிஞ்ச வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு
கலந்து கெட்டியாச் சப்பாத்தி மாவு மாதிரி பிசைஞ்சு கையாலெயே ரொட்டி மாதிரி தட்டி,
தோசைக்கல்லுலே போட்டு சுத்திவர எண்ணெய் கொஞ்சம் ஊத்திச் சுட்டுச் சாப்பிட்டாலும்...
ஆஹா.... //

தொட்டுக்கிர என்ன வெச்சுக்கனுமுன்னு சொல்லலையே.......

// நண்பர் ஒருத்தர் முருங்கைக் கீரைய நல்லா காயவச்சு மலேசியாவுலே இருந்து கொண்டுவந்து தந்தார்.
அதையும் விடாம பருப்புபோட்டுச் சமைச்சு முழுங்குனேன். //

ஆகா! இதுவல்லவோ முருங்கைக்கீரை பாசம்.

// பாருங்க ராகவன், பூன்ஸ்க்கு எந்த மாதிரியான சந்தேகம் எல்லாம் வருதுன்னு?:-) //

பேசாம...அவரு சந்தேகத்தைத் தீர்த்து வைக்கும் பாட்டோடு வருகின்றவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் என்று பரிசு வைத்து விடலாமா?

said...

ராகவன்,

இந்தத் 'தொட்டுக்கற' விஷயத்துலே மட்டும் நான் கொஞ்சம் வேறமாதிரி.
வடை, அடை இதுக்கெல்லாம் தொட்டுக்கன்னு ஒண்ணும் வேணவே வேணாம்.
நல்லா முறுகலா இருந்தாவே போதும்.

ஆமாம், அடையே நல்லா திம்முன்னு இருக்கறப்ப, இந்த அவியல் எப்படி அதுக்குத் தோது? ஏகப்பட்டா காயெல்லாம்
போட்டு... யாரு இந்தமாதிரி காம்பினேஷன் கண்டுபிடிச்சிருப்பாங்க?
அடைக்கு வேணுமுன்னா வெல்லம் நல்லா இருக்கும்.

said...

//பேசாம...அவரு சந்தேகத்தைத் தீர்த்து வைக்கும் பாட்டோடு வருகின்றவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் என்று பரிசு வைத்து விடலாமா? //
அறிவிக்கறதோட விட்டுராதீங்க.. பொற்காசுகளும் குடுக்கறதுக்கு ஏற்பாடு பண்ணுங்க..

இதெல்லாம் படிக்கும்போது நான் ஏன் பெங்களூர்ல இருந்து வந்தேன்னு இருக்கு.. பேசாம வாரா வாரம் ராகவன் வீட்டுக்குப் போய் அவருக்குப் போட்டியா இல்ல இல்ல, அவர் நாக்குக்குப் போட்டியா நானும் சாப்பிட்டிருக்கலாம்... ம்ம். :(

said...

// இந்தத் 'தொட்டுக்கற' விஷயத்துலே மட்டும் நான் கொஞ்சம் வேறமாதிரி.
வடை, அடை இதுக்கெல்லாம் தொட்டுக்கன்னு ஒண்ணும் வேணவே வேணாம்.
நல்லா முறுகலா இருந்தாவே போதும். //

எனக்கு தொட்டுக்க இருந்தாலும் பிடிக்கும். இல்லைன்னாலும் பிடிக்கும். :-) இதுல ஒன்னு. அதுல ஒன்னு.

// ஆமாம், அடையே நல்லா திம்முன்னு இருக்கறப்ப, இந்த அவியல் எப்படி அதுக்குத் தோது? ஏகப்பட்டா காயெல்லாம்
போட்டு... யாரு இந்தமாதிரி காம்பினேஷன் கண்டுபிடிச்சிருப்பாங்க?
அடைக்கு வேணுமுன்னா வெல்லம் நல்லா இருக்கும். //

அடைக்கு அவியல் எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஆனா வீட்டுல அட சுட்டா வெல்லமும் தேங்காய்த் துவையலுந்தான். நல்லா இருக்கும்.

said...

// அறிவிக்கறதோட விட்டுராதீங்க.. பொற்காசுகளும் குடுக்கறதுக்கு ஏற்பாடு பண்ணுங்க.. //

அட பொன்ஸ்....தண்டோரா போடுறது மட்டுந்தான் என் வேலை. உங்க பேர்லயே பொன்னை வெச்சுக்கிட்டு...நீங்கதான் குடுக்கனும்.

// இதெல்லாம் படிக்கும்போது நான் ஏன் பெங்களூர்ல இருந்து வந்தேன்னு இருக்கு.. பேசாம வாரா வாரம் ராகவன் வீட்டுக்குப் போய் அவருக்குப் போட்டியா இல்ல இல்ல, அவர் நாக்குக்குப் போட்டியா நானும் சாப்பிட்டிருக்கலாம்... ம்ம். :( //

வாங்க. வாங்க...

said...

// பச்சை அடை என்று சொல்லியும் கீரை சாப்பிடாத குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
//

TV proram pakkara maari erukku