Thursday, December 01, 2005

பீர்க்கங்காய் துவையல்

பீர்க்கங்காய் - ஒன்று (இளசு, சிறியது).
பொரிகடலை (பொட்டுக்கடலை) - 50 கிராம்
சின்ன வெங்காயம் - 12
பச்சை மிளகாய் - 4-5 (உறைப்பிற்கேற்ப கூட்டியும் குறைத்தும் கொள்ளலாம்)
புளி - ஒரு சின்ன வெங்காய அளவு
ஜீரகம் - இரண்டு தேக்கரண்டி
வெந்தயம் - சிறிதளவு
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - சிறிதளவு

1. பீர்க்கங்காயை கழுவி தோலோடு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

2. சின்ன வெங்காயத்தை தோலுரித்துக் கொள்ளவும்

3. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெந்தயமும் ஜீரகமும் போடவும்.

4. வெந்தயமும் ஜீரகமும் நன்றாகப் பொரியும் வேளையில் வெங்காயத்தைச் சேர்க்கவும்.

5. வெங்காயம் சற்று வெந்ததும் பீர்க்கங்காய் துண்டுகளையும் புளியையும் சேர்க்கவும். சற்று அதிகமாக சேர்த்துக் கொண்டால் புளிப்பு நன்றாக கலந்து வரும்.

6. பீர்க்கங்காய் வெந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.

7. ஆறிய பீர்க்கங்காய் கலவை, பச்சை மிளகாய், பொரிகடலை, உப்பு ஆகியவறைச் சேர்த்து அரைக்கவும். பீர்க்கங்காய் துவையல் தயார்.

அரைக்கும் பொழுது முதலில் தண்ணீர் சேர்க்கக் கூடாது. தேவைப்பட்டால் மட்டுமே சேர்க்க வேண்டும். ஏனென்றால் பீர்க்கங்காயில் தண்ணீர் இருக்கும். இந்தத் துவையல் ரசஞ் சோற்றுக்கு மிகவும் சிறந்த துணை. புளிப்பைக் கூட்டினால் இட்டிலி தோசைக்கும் நன்றாக இருக்கும். நல்லெண்ணெய் சேர்த்து சோற்றோடு பிசைந்து தின்னவும் ருசிக்கும்

அன்புடன்,
கோ.இராகவன்

12 comments:

said...

ராகவன்,
சுவைக்கச் சுவைக்க எழுதி இருக்கீங்க!

ஒடனே செஞ்சு பாக்கறதா இருக்கேன்; அதுக்கு முன்னாடி ஒரு கேள்வி,

நீங்க இதை செஞ்சு, சாப்ட்டு இருக்கீங்களா?
ஆம் என்றால், எத்தனை முறை செய்திருக்கிறீர்கள்; மீண்டும் மீண்டும் செய்து சாப்பிடும் எண்ணம் உள்ளதா!

எல்லாம் ஒரு முன் எச்சரிக்கைதான்!!
;-)

said...

எங்க வீட்டுல பொரிக்கடலைக்கு பதிலா கடலைப் பருப்பு போட்டு செய்வாங்க. ரொம்ப நல்லா இருக்கும். எனக்கு பிடித்த சில பொரியல்களில் ஒன்று.

ஞானபீடம். தைரியமா செஞ்சுப்பாருங்க. மீண்டும் மீண்டும் வா; வேண்டும் வேண்டும் வான்னு பாட ஆரம்பிச்சுடுவீங்க.

said...

I meant துவையல்/கூட்டு; பொரியல் இல்லை.

said...

// நீங்க இதை செஞ்சு, சாப்ட்டு இருக்கீங்களா?
ஆம் என்றால், எத்தனை முறை செய்திருக்கிறீர்கள்; மீண்டும் மீண்டும் செய்து சாப்பிடும் எண்ணம் உள்ளதா! //
ஆமாம், நான்கைந்து முறைகள் செய்திருக்கிறேன், ஆமாம்.

இப்பொழுது துணிச்சல் வந்ததா ஞானபீடம்?

said...

// ஞானபீடம். தைரியமா செஞ்சுப்பாருங்க. மீண்டும் மீண்டும் வா; வேண்டும் வேண்டும் வான்னு பாட ஆரம்பிச்சுடுவீங்க. //

உண்மை உண்மை உண்மை. குமரன் வாக்கு உண்மை. கடலைப்பருப்பும் சேர்க்கலாம்.

said...

I tried this "பீர்க்கங்காய் துவையல்" today. It came out so good. My family loved it. Thank you.

Rumya

said...

ம் ரொம்ப நாள் முன்னால தொட்டியில் வச்சிருந்த கொடி ஊருக்குபோயிட்டு வந்தப்போ செத்துப்போச்சு ..திருப்பி வைக்க வாய்ப்பே வரலை..
ஆசையை உண்டாக்கிட்டீங்க
சரி இந்த முறை திருப்பி வாங்கிட்டு வந்துடறேன் சின்னசெடியாக...

said...

ராகவா!
இப்படிப் பதிவு போடும் போது படமும் (காய்கறி) போடுங்கள்.
என் பதிவில் உள்ள படத்தைப் போடவும்.
ஏனெனில் நமது நாட்டில் வேறு பெயரிலும் அழைப்பதுண்டு.

said...

ராகவன்,
தொகையல் படிக்கவே ஸ்ஸ்னு இருக்கு.

எங்க வீட்டில வெறும் உ.பருப்புதான் போடுவோம்.
இது மசாலாவோட நல்லாத்தான் இருக்கு.

சப்பாத்தி கூடவும் நல்லா இருக்கும்.

said...

நார்த்தங்காய் ஊறுகாய் செய்முறை குறிப்புகளைப் பற்றிய உங்கள் பதிவை உடனே போடவும். உபயோகமாயிருக்கும்.

said...

பீர்க்கங்காய்த் துவையலை இட்டலி, தோசையோடும் தொட்டுக் கொள்ளலாம். மிகவும் சுவையாக இருக்கும். தேங்காய்த் துவையலை ஒதுக்க நினைப்பவர்கள் (குறிப்பாக நீரழிவு, கொழுப்பு நோய்க்காரர்கள்) இதைச் சேர்த்துக் கொள்ளலாம்.

பீர்க்கங்காய் எல்லா நாட்களிலும் கிடைப்பது தான் குதிரைக் கொம்பு.

நல்ல சமையற் குறிப்பு.

அன்புடன்,
இராம.கி.

said...

I want to go home now to eat such stuff , u have put all the tastiest dishes