Saturday, September 23, 2006

8. முட்டைக்கோஸ் ஓட்ஸ் உப்புமா

"இன்னைக்கு என்ன செய்யப் போற?" ராத்திரிக்கு என்னன்னு கேக்குறாராம் மயிலாரு.

"இன்னைக்கா....கறியெடுத்து கொழம்பு வெக்கனும். கோழியடிச்சி வறுவலு. மீன்...நல்ல நெய் மீனாவோ ரொகுவோ கிடைச்சா அதையும் பக்குவம் செய்யனும்..." பின்னே வேலைய முடிச்சிட்டு அலுத்துப் புலுத்து வர்ரவன் கிட்ட கேக்குற கேள்வியா.

"அடப்பாவி...இத்தன தின்னா குண்டாயிருவ.....பேசாம சத்துள்ளதா ஏதாவது செஞ்சுரு"

"சத்துள்ளதுன்னா? தின்னா சதை போடக்கூடாது. கொழுப்பு ஏறக்கூடாது. சர்க்கரச் சத்து வரக்கூடாது. அதான நீங்க சொல்றது?"

ஒரு கண்ணை மட்டும் திறந்து என்னைப் பார்த்தார் மயிலார். "ஆமா...அதேதான்." வெடுக்குன்னு சொன்னார்.

"சரி...அதையே செஞ்சிருவோம். ஆனா அதைச் செய்றது எப்படீன்னு நீங்களே சொன்னா நல்லாயிருக்கும்........" இழுத்தேன். சொல்றது எல்லாருக்கும் லேசு. ஆனா செய்றது. ஆகையால அவரையே கேட்டுட்டேன். ஆனா அவரு பாக்குறதப் பாத்தா அசந்து போற மாதிரித் தெரியலை.

"ஓட்ஸ் உப்புமா சாப்பிடுறையா? ஓட்ஸ் நல்லது." ஏதோ புதுப் பேர எடுத்து விட்டாரு மயிலாரு. இதுக்குன்னே அகராதி (ரெண்டு பொருள்ளயும் எடுத்துக் கோங்க) இருக்கும் போல.

"ஓட்ஸா? இங்கிலீஷ் கதைகள்ள குதிரைக்குக் குடுக்குறாங்களே! அதா? அது ஏதோ புல் வகையாமே! புலி பசிச்சாலும் புல்லைத் திங்காது தெரியுமா? நாங்கள்ளாம்..."

"நிறுத்து..ரொம்பப் பேசாத. வீட்டுக்குள்ளயே உக்காந்து மூனு வேளையும் மூக்கப் பிடிக்கத் தின்னுக்குட்டு நீர்யான மாதிரி இருக்க. புலியாம் புலி. ஓட்ஸ் உப்புமாதான் செய்யனும் இன்னைக்கு" அவரே முடிவெடுத்தாச்சு. இனி என்னத்த மாத்துறது. "சரி. சொல்லுங்க."

"வெங்காயம் இருக்கா? எடுத்துப் பொடிப் பொடியா நறுக்கிக்க."

"நறுக்கியாச்சு"

"பச்சமெளகா இருக்கா? எடுத்து நடுவுல கீறிக்க"

"கீறியாச்சு"

"கருவேப்பிலை இருக்கா? உருவி வெச்சுக்க"

"உருவியாச்சு"

"முட்டைக்கோசப் பொடிப் பொடியா நறுக்கிக்க"

"நறுக்கியாச்சு"

"ஓட்ஸ் எடுத்து ஒரு கிண்ணத்துல வெச்சுக்க"

"வெச்சாச்சு"

"இப்ப அடுப்புல சட்டிய வெச்சி காய வை"

"வெச்சாச்சு"

"அதுல நல்லெண்ணய ஊத்திக் காஞ்சதும் கடுகு உளுந்தம் பருப்பு போடு"

"போட்டாச்சு"

"கடுகு உளுந்தப் பருப்பு வெடிச்சதும் கருவேப்பிலை வெங்காயம் பச்சமெளகாயப் போட்டு வதக்கு"

"வதக்கியாச்சு."

"லேசா மஞ்சப் பொடியத் தூவு"

"தூவியாச்சு"

"நறுக்கி வெச்ச முட்டைக்கோச அதுல போட்டுக் கூட்டணியாக்கு"

"ஆக்கியாச்சு"

"கிண்ணத்துல இருக்குற ஓட்ஸ அதுல போட்டுக் கிண்டு"

"கிண்டியாச்சு"

"ஒன்னரக் கிண்ணம் தண்ணிய ஊத்திக் கெளறு"

"கெளறியாச்சு"

"தேவையான அளவு உப்புப் போட்டு வேகவிடு"

"விட்டாசு"

"கெட்டியானதும் அடுப்ப அணைச்சுரு"

"அணைச்சாச்சு"

"சட்டியில இருக்குற எடுத்து தலைல போட்டுக்கோ"

"போட்.....அட என்னங்க இது....தலையில போடச் சொல்றீங்க?"

"பின்னே ஒன்ன வெச்சி என்ன பண்றதாம்!... சரி சொன்னதச் செஞ்சியா?"

"செஞ்சாச்சே. ஆனா இது ரவைல செய்ற உப்புமா மாதிரி உதிரியா இல்லையே." லேசாக் கொழகொழப்பா இருக்குற மாதிரி ஒரு எண்ணம்....புதுசாச் செய்றோம்ல.

மயிலார் படக்குன்னு சொன்னாரு. "ரவையில ஒரு சத்தும் கெடையாது. ஒதுல நார்ச்சத்து மொதக்கொண்டு எல்லாம் இருக்கு. கொழுப்பு கெடையாது. சர்க்கரைச் சத்தும் கொறைச்சல். ஒடம்ப மெலிய வைக்கும். அதுனால உதிரி உதிரியா இல்லைன்னாலும் சாப்பிடு. தொண்டைக்குள்ள பட்டுக்கிறாது. இதுக்குத் தயிரும் கொஞ்சமே கொஞ்சமா ஊறுகாயும் வெச்சுக்க. நல்லாயிருக்கும்" விட்டாக் கொத்தீருவாரு போல. மயிலார் சொன்ன மாதிரியே செஞ்ச ஓட்ஸ் உப்புமாவை தட்டுல போட்டு தயிரும் ஊறுகாயும் போட்டு வெச்சிருக்கேன். கை தவறி ஊறுகா நெறைய விழுந்திருச்சு. நீங்க கொஞ்சமா போட்டுக்குங்க. இத நான் சாப்பிட்டிருவேன். ஆகையால நீங்க செஞ்சிச் சாப்பிடுங்க. சரியா?




அன்புடன்,
கோ.இராகவன்

Wednesday, February 15, 2006

உக்கரை மேலொரு அக்கறை

உக்கரை தெரியுமா உங்களுக்கு? செட்டிநாட்டுச் சட்டிகளையும் ஐயர் வீட்டு அடுப்புகளையும் கேட்டால் தெரியும் உக்கரையின் பெருமை.

உருவத்தையும் சுவையையும் வைத்துப் பார்த்தால் புட்டப்பனுக்கும் கேசரியம்மாளுக்கும் பிறந்த குழந்தை என்று தெரிகிறது. மெத்து மெத்தென்று புட்டுப் போல உதிரி உதிரியாக இருக்கும். கேசரிக்கும் கொஞ்சம் அடர்ந்த நிறத்தில் இருக்கும் உக்கரையை கொஞ்சமாக மூன்று விரல்களால் கிள்ளி வாயில் போட்டால்....அடடா!

உக்கரை விஷயத்தில் மட்டும் யாகாவாராயினும் நாகாக்கக் கூடாது. விவேகாநந்தரின் வாயில் ராமகிருஷ்ணர் வெல்லக் கட்டியை வைத்தாராம். அரைமணி நேரம் கழித்து வாயைத் திறக்கச் சொன்னால் முழு வெல்லக் கட்டி அப்படியே இருந்ததாம். வெல்லக் கட்டிக்குப் பதிலாக கொஞ்சம் உக்கரையை வைத்தால் விவேகாநந்தர் தோற்றிருப்பார் என்பதில் ஐயமேயில்லை.

லட்டு, பூந்தி, அல்வா போல இது தித்திப்பு மிகுந்த பண்டமும் அல்ல. ஆனால் இனிப்புப் பண்டம். அளவான இனிப்பு. அதனால்தான் கிள்ளித் தின்பதை விட அள்ளித் தின்பது பெருஞ் சுகம். இனிப்புப் பண்டங்களைக் கொஞ்சம் அதிகமாக தின்றுவிட்டால் திகட்டும். அந்தப் பேச்சே உக்கரையிடம் கிடையாது. நாக்குக்கு ரொம்பவும் அக்கறையாக இருப்பதால் இன்னொரு கரண்டி என்றுதான் கேட்கச் சொல்லும்.

தோள் கண்டார் தோளே கண்டார். இது கம்பன் வாக்கு. உக்கரை உண்டார் உக்கரையே உண்டார். இது இந்த வம்பன் நாக்கு...அல்லது வாக்கு.
இவ்வளவு சொல்லியாகி விட்டது. உக்கரையைச் செய்வது எப்படி என்று சொல்ல வேண்டுமே! நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது அடியேனுடைய விருப்பம். மேலும் உக்கரையின் மகிமையை எடுத்துச் சொல்லி அதன் புகழைப் பரப்பினால் பிறவிப் பெருங்கடலில் இக்கரையிலும் அக்கரையிலும் உக்கரைக் கரையாகக் கொடுப்பான் என்று உக்கரையாகப் பரணியில் சொல்லியிருக்கின்றது.

பச்சரிசியும் தோல் நீக்கிய பாசிப்பருப்பும் சரிக்குச் சமமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதிலிருந்து உக்கரையின் சமதர்ம எண்ணம் நமக்குத் தெளிவாக விளங்குகிறது.

இரண்டையும் தனித்தனியாக நன்றாக நீரில் கழுவி நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். நன்றாக உலர்ந்த பிறகு வெற்று வாணலியில் இளஞ்சூட்டில் தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். இங்குதான் கவனமாக இருக்க வேண்டும். வறுக்கிறேன் என்று கருக்கி விடக் கூடாது. தெரிகிறதா. இதமாகவும் பதமாகவும் பச்சை வாடை போக வறுத்தால் போதும். ரொம்பவும் வறுத்த அரிசையையும் பருப்பையும் போட்டால் நாக்கை வருத்தத்தான் பண்டம் கிடைக்கும். உக்கரை கிடைக்காது.

வறுத்தவைகளை ஆற வைத்து மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும். மிக்சி இருப்பவர்கள் மிக்சியில். கல்லுரலும் உலக்கையும் இருப்பவர்கள் அதிலேயே இடித்துக் கொள்ளலாம்.

இட்டிலிக் கொப்பரையில் இட்டிலி மாவிற்கு பதிலாக இந்த மாவை வைத்து ஆவியில் வேக வைக்க வேண்டும். புட்டுக்கு வேக வைப்பது போல. ஆனால் நீர் ஊற்றிப் பிசையக் கூடாது. உலர்ந்த மாவை அப்படியே வேகவைக்க வேண்டும்.

வெந்த மாவை நன்றாக உதிர்த்து ஆற வைத்துக் கொள்ளவும். வெல்லப் பாகை காய்ச்சி, நன்றாக காய்ந்து வரும் பொழுது வெந்த மாவை அதனோடு சேர்த்துக் கிளற வேண்டும். மாவு குறைவாகப் போனால் கொளகொளவென கேசரி போல ஆகிவிடும். கிளறும் பொழுதும் மாவு உதிரியாக இருக்க வேண்டும். வெல்லப் பாகும் மாவும் கலந்து நன்றாக உதிரியாக இருக்கையில் லேசாக நெய் விட்டு ஏலக்காய்ப் பொடி தூவி இறக்கி வைக்கவும். சுவையான உக்கரை தயார்.

உக்கரையைச் சுடச்சுடச் சாப்பிடக் கூடாது. ஆறிய பிறகு தட்டில் வைத்து கையால் எடுத்துச் சாப்பிட வேண்டும். ஸ்பூனில் எடுத்துச் சாப்பிட்டால் உக்கரையின் மெத்துமை கைகளுக்குத் தெரியாமல் போய்விடும். அழுத்தி எடுக்கக் கூடாது. பஞ்சுமிட்டாயைப் பதமாகப் பிய்க்கிற மாதிரி தனக்கு வலிக்குமோ உக்கரைக்கு வலிக்குமோ என்று எடுத்து வாயில் போட்டுக் கொள்ள வேண்டும்.

உக்கரையின் சுவையை உண்டர் விண்டிலர். விண்டவர் உண்டிலர் என்பதே உண்மை. நீங்களும் உக்கரையினை அக்கறையோடு செய்து உண்டு அதன் பலன்களை உக்கரையாகப் பரணியில் சொல்லியிருக்கும்படி அடைந்து வாழுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, January 30, 2006

ஹிண்டி மொசுரு

இதென்னடா பேருன்னு பாக்குறீங்களா! அது ஒரு சுவையான விஷயம். இது வடகர்நாடக மக்கள் விரும்பும் ஒரு உணவு. எனக்கும் பெங்களூர் வந்தப்புறம் மிகவும் பிடிச்சுப் போன உணவு. ஆகையால இதப் பத்தி ஒங்களுக்கெல்லாம் சொல்லலாமுன்னு பாக்குறேன். சொல்றத ஒழுங்கா குறிச்சி வெச்சுக்கிட்டு செஞ்சு பாருங்க.

ஹிண்டி மொசுருக்குப் போறதுக்கு முன்னாடி ஈருள்ளிச் சப்பாத்தியப் பாப்போம். ஏன்னா. ஹிண்டி மொசுரத் தொட்டுக்கிட்டுதான் ஈருள்ளிச் சப்பாத்தியச் சாப்பிடனும்.

வடக்கு கர்நாடகா, அதாவது பிஜாப்பூர் சுத்து வட்டாரம். கொஞ்சம் வறண்ட பிரதேசம். மராட்டியும் கன்னடமும் கலந்த கலாச்சாரம். அங்க சோறெல்லாம் கெடைக்காது. சோளமும் கோதுமையும்தான்.

சோளத்தை ஜோளம்-ன்னு சொல்வாங்க. கோதுமைய கோதின்னு சொல்வாங்க. அவங்க ஊருல ஜோளத ரொட்டி (சோள ரொட்டி) ரொம்பப் பிரபலம். சுட்டு வெச்சு அதக் காய வெச்சிக்கிருவாங்க. காஞ்சதும் கடக்மொடக்குன்னு இருக்கும். அந்த ரொட்டிக்கே கடக் ரொட்டீன்னுதான் பேரு. அத ஹிண்டி மொசுருல தொட்டுக்கிட்டு ருசிச்சி ருசிச்சிச் சாப்பிடுவாங்க.

நம்ம ஜோளத ரொட்டியை விட்டுட்டு ஈருள்ளிச் சப்பாத்தியைப் பார்ப்போம். நம்ம செய்யுற சப்பாத்தி போலதான். ஆனா வெங்காயத்த இடிச்சுச் சாறெடுத்து அதச் சப்பாத்தி மாவுல கலந்துருவாங்க. இப்ப மிக்சர் இருக்குறதால வெங்காயத்தை நல்லா அரைச்சு சப்பாத்தி மாவுல பெசஞ்சு கலந்துருவாங்க. அதச் சப்பாத்தி போட்டா அதுதான் ஈருள்ளிச் சப்பாத்தி. அங்க வெயில் நெறைய. அதனால குளிர்ச்சிக்கு வெங்காயத்தை இப்படி சேத்துக்குவாங்க.

இப்ப ஈருள்ளி சப்பாத்தி தயார். ஹிண்டி மொசுருதான் மிச்சம். இதுல மொசுருன்னா தயிர். அவ்வளவுதான். ஆகையால நாம இப்பப் பாக்க வேண்டியது ஹிண்டி மட்டும்தான்.

நிலக்கடலப் பருப்பை எண்ணெய்யில்லாம நல்லா வறுத்து, தோல உரிச்சுக்கணும். அத்தோட பூண்டுப் பற்கள், கொஞ்சம் கல்லுப்பு, தேவையான அளவு மெளகாத்தூள் போட்டு இடிச்சு வெச்சுக்கோங்க. மிக்சர் இருந்தா எதக்கலும் கொதக்கலுமா அரைச்சு வெச்சுக்கோங்க. ஹிண்டி தயார். அங்கெல்லாம் உறப்பு நல்லா சாப்பிடுவாங்க. ஆகையால நெறைய மொளகாப்பொடி போடுவாங்க. நமக்குத் தேவைக்கு நம்ம போட்டுக்கலாம். பச்சைப் பூண்டு பிடிக்காதவங்க பூண்டுப் பற்கள எண்ணெயில்லாம வதங்கியும் போடலாம்.

ஈருள்ளிச் சப்பாதிய தட்டுல போட்டுக்கோங்க. ஹிண்டிய தட்டுல பொடி போட்டுக்கிற மாதிரி போட்டுக்கிட்டு அதுல மொசுர (தயிர) ஊத்திக் குழப்புங்க. குழப்புன விரல சும்மா விடாதீங்க. அப்புறம் சப்பாத்தியத் தொட்டுச் சாப்பிட்டுப் பாருங்க...........அடடா! என்ன அருமை! என்ன அருமை!

தயிர்ச்சோறு சாப்பிடும் போது அதுல கொஞ்சம் ஹிண்டியத் தூவிக்கிட்டா பிரமாதமா இருக்கும். தோசைக்கும் இந்த ஹிண்டி மொசுரு நல்லாயிருக்கும். செஞ்சு பாத்துட்டுச் சொல்லுங்க. அப்புறம் நீங்களும் ஹிண்டி மொசுரு விசிறிதான்.

அன்புடன்,
கோ.இராகவன்



நமது நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி இந்தப் புகைப்படத்தை இங்க போடுறேன். வெப்காமிராவுல எடுத்ததால தெளிவா இல்லை. படத்துல பாக்குறது ஹிண்டி. இதுலதான் மொசுரு (தயிர்) கலந்து சாப்பிடனும்.

Monday, January 02, 2006

முழுநெல்லி பிசைஞ்ச ஊறுகாய்

தேவையான பொருட்கள்
முழுநெல்லிக்காய் - வேண்டிய அளவு
மிளகாய்த் தூள் - அளவிற்கேற்ப
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
நல்லெண்ணெய் - வேண்டிய அளவு

செய்முறை
1. நெல்லிக்காயை நன்றாகக் கழுவிக் கொள்ளவும்.
2. சிறிதளவே தண்ணீர் விட்டு, அதில் மஞ்சப்பொடியும் போட்டு, நெல்லிக்காய்களை ஆவியில் நன்றாக வேகவிடவும். வேகும் பொழுது அடிப்பிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும்.
3. வெந்த பிறகு நெல்லிக்காய்களை எடுத்து ஆறவைக்கவும்.
4. ஆறிய நெல்லிக்காய்களைப் பிதுக்கினால் சதையும் கொட்டையும் தனித்தனியாக வந்துவிடும்.
5. சதைப்பற்றை மட்டும் எடுத்துக் கொண்டு லேசாகப் பிசையவும். கஞ்சியாகவும் பிசையக் கூடாது. முழுசாகவும் விட்டு விடக்கூடாது. இரண்டும் கலந்தாற்போல இருக்க வேண்டும்.
6. அடுப்பில் வாணலியைக் காய வைத்து எண்ணெய் விடவும்.
7. கடுகு உளுந்தம் பருப்பு போட்டு வெடித்ததும், கருவேப்பிலைகளைப் போடவும்.
8. பெருங்காயமும் மிளகாய்த்தூளும் தேவையான உப்பும் கலந்து எண்ணெய்யில் போடவும்.
9. உடனேயே நெல்லிகாய் பிசையலைப் போட்டு நன்றாகக் கிண்டவும்.
10. பார்ப்பதற்கு அல்வா பதத்திற்கு வந்ததும் சட்டியை இறக்கி வைக்கவும்.
11. அருமையான நெல்லிக்காய் பிசைஞ்ச ஊறுகாய் தயார். தயிர்ச்சோறு, தோசை, இட்டிலி வகைகளுக்கு நன்றாக இருக்கும்.


அன்புடன்,
கோ.இராகவன்