Thursday, December 01, 2005

கோதுமை ரவை கதம்பம்

கதம்ப சாதம் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதுவும் அது போலத்தான். கலந்த வகைகள் செய்தால் இதையும் செய்யலாம்.

கோதுமை ரவை - ஒரு கப்
பாசிப் பருப்பு - முக்கால் கப் (தோலுரித்து உடைத்தது)
பீர்க்கங்காய் - இரண்டு
வெங்காயம் - ஒன்று (பெரியது)
தக்காளி - இரண்டு (பெரியது)
பச்சை மிளகாய் - ஒன்று (நீளமானது)
சாம்பார் பொடி - தேவையான அளவு
மள்சள் பொடி - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்துமல்லி இலை - சிறிதளவு. தூளாக நறுக்கியது. (மேலே தூவ)
உப்பு - தேவையான அளவு

1. பீர்க்கங்காயை தோல் நீக்கி, சற்று பெரிய வட்ட வில்லைகளாக நறுக்கிக் கொள்ளவும்.

2. வெங்காயத்தையும் தக்காளியையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

3. குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுந்தம் பருப்பு போடவும். வெடித்ததும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். சிறிது மஞ்சள் தூளைச் சேர்க்கவும். பிறகு தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.

4. அத்தோடு தேவையான அளவு சாம்பார் பொடியும் உப்பும் கலக்கவும்.

5. கலந்தபின் பீர்க்கங்காய் துண்டுகளைச் சேர்க்கவும். லேசாக இரண்டு முறை புரட்டி விட்டு கோதுமை ரவையையும் பாசிப் பருப்பையும் சேர்க்கவும்.

6. ஒன்றுக்கு ஒன்றே முக்கால் அல்லது இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடவும்.

7. இரண்டு மூன்று விசில்களுக்கு விடுங்கள். ஆவி போனதும் (குக்கரில், செய்கிறவர் ஆவியல்ல) திறந்து மல்லித்தூள் தூவி பரிமாறவும்.

புதுமையாகவும் நன்றாகவும் இருக்கும். பரிமாறுகையில் மேலாக நல்லெண்ணெய் விட்டுக்கொள்ளலாம். பீர்க்கங்காயிற்கு மாற்றாக வேறு காய்கறிகளும் போட்டு முயன்று பார்க்கலாம். ஆனால் பீர்க்கங்காய்தான் மிகவும் சிறப்பு. பீட்ரூட் கலக்கலாம். கதம்பம் சற்று சிவப்பாகவும் இருக்கும். பூசணிக்காயும் நன்றாக இருக்கும்.

தொட்டுக்கொள்ள வடகம் சிப்ஸ் ஆம்லெட் போன்றவை நன்றாக இருக்கும்.

இந்தக் கதம்பத்தின் சிறப்பம்சமே இதை சர்க்கரை நோயாளிகளும் யோசிக்காமல் வெட்டலாம். அரிசி அறவே கிடையாது. ஆனால் சுவையும் அபாரம்.

அன்புடன்,
கோ.இராகவன்

11 comments:

said...

ரவா எனக்கு அலர்ஜி. அவ்வளவாய் பிடிக்காது. அதனால் எங்கள் வீட்டில் எப்போதாவது உப்புமா வேண்டும் என்று ஆசைப்பட்டால் எனக்கு சாப்பாடு வெளியே தான். இந்த ரெசிப்பியை வீட்டுல காமிக்கிறதில்லன்னு முடிவு பண்ணிட்டேன். அவங்களா இராகவனோட இந்தப் பதிவைப் படிச்சுடக்கூடாதுன்னு கடவுளையும் வேண்டிக்கறேன். :-)

said...

படிக்கும்போதே பசியெடுக்கிறது. எழுதியவர் கைராசி.

இப்போ பண்ணிக் கொடுக்க ஆள் தேட வேண்டியதுதான்.

பேஷ்! பேஷ்!! ரொம்.....ப நன்னாயிருக்கு!

ஜயராமன்

said...

// ரவா எனக்கு அலர்ஜி. அவ்வளவாய் பிடிக்காது. அதனால் எங்கள் வீட்டில் எப்போதாவது உப்புமா வேண்டும் என்று ஆசைப்பட்டால் எனக்கு சாப்பாடு வெளியே தான். //

குமரன், இது வெள்ளை ரவையில்லை. கோதுமை ரவை. இதை ஒருமுறை என் பெயரைச் சொல்லிச் சாப்பிட்டுப் பாருங்கள். அப்புறம் நீங்கள் இதைப் பாராட்டிப் பதிவு போடவில்லை என்றால் பார்த்துக் கொள்கிறேன்.

said...

// படிக்கும்போதே பசியெடுக்கிறது. எழுதியவர் கைராசி. //

நன்றி ஜெயராமன். கண்டிப்பாக இதை ஒரு முறையேனும் சாப்பிட வேண்டும்.

// இப்போ பண்ணிக் கொடுக்க ஆள் தேட வேண்டியதுதான். //

கைப்பக்குவமா முயற்சி செஞ்சு பாருங்களேன்.

said...

சார்,

பச்சைமிளகாயை என்ன சார் பண்ணட்டும்?

ஒருவேளை, சரியாக வரவில்லையென்றால், எழுதியவரை "கவனிக்க" வா?

ஜயராமன்

said...

// சார், //

ஜயராமன், சார் எல்லாம் வேண்டாமே. பேரைச் சொல்லியே கூப்பிடுங்க.

// பச்சைமிளகாயை என்ன சார் பண்ணட்டும்? //
அதையும் ரெண்டாக் கீறி போட்டுருங்க. மறந்துட்டேன் சொல்ல.

// ஒருவேளை, சரியாக வரவில்லையென்றால், எழுதியவரை "கவனிக்க" வா? //
ஜயராமன் பலராமனா ஆகவேண்டியிருக்காதுன்னு நம்புறேன். செஞ்சிட்டுச் சொல்லுங்க.

said...

ஆஹா! என்ன அருமை செய்து பார்த்தேன் ருசியாக இருந்ததது.என் கணவருக்கு சர்க்கரை வியாதி இருப்பதால் அவருக்கும் செய்து கொடுக்க அருமையான உணவு.இதே போல் வெண்பொங்கலுக்கு அரிசிக்கு பதில் கோதுமை ரவையை பயன்படுத்தி செய்து பாருங்கள்.சுவை அபாரம்!

said...

// ஆஹா! என்ன அருமை செய்து பார்த்தேன் ருசியாக இருந்ததது.என் கணவருக்கு சர்க்கரை வியாதி இருப்பதால் அவருக்கும் செய்து கொடுக்க அருமையான உணவு. //
ஆகா! பல்லவி வாங்க. வாங்க. சர்டிபிகேட் கொடுத்த சங்கத் தலைவின்னு ஒங்களப் புகழத் தோணுது. நம்ம குமரன் என்னடான்னா இத எப்படி சாப்புடுறதுன்னு யோசிக்கிறாரு. அப்ப வந்து உதவீருக்கீங்க. நன்றி. நன்றி.

// இதே போல் வெண்பொங்கலுக்கு அரிசிக்கு பதில் கோதுமை ரவையை பயன்படுத்தி செய்து பாருங்கள்.சுவை அபாரம்! //
ஆமாம். ஆமாம். அதையும் செய்து பார்த்து ருசித்து மகிழ்ந்தேன். அரிசிப் பொங்கல் சாப்பிடுவது போலவே சாம்பார் சட்டினி ஊத்தி விளையாடலாம். நன்றாகவே இருக்கும்.

said...

kadhamba sadhathai seidhu parthen suvayaha irundhadhu.
ukkaraikku photo pottal nandraha irukkum.
Innum niray recipies podungal
Egg il niraya recipies podungal

said...

//இரண்டு மூன்று விசில்களுக்கு விடுங்கள். ஆவி போனதும் (குக்கரில், செய்கிறவர் ஆவியல்ல) திறந்து மல்லித்தூள் தூவி பரிமாறவும்//

ROFL !

said...

thaneer alavu kurippittathu gothumaikkum paasiparuppukkum serthu thaane?