Saturday, August 18, 2007

9. குடைமிளகாய் இறால்

"எறால் வாங்கீட்டு வந்திருக்கேன். என்ன செய்றதுன்னு தெரியலை" என்று கூடத் தங்கியிருக்கும் அலுவலக நண்பன் சொன்னப்போ, "சரி நாஞ் செய்றேன்"ன்னு சொல்லீட்டேன். எறால் நமக்கென்ன புதுசா? எவ்வளவு பாத்திருக்க மாட்டோம். நம்மூர்ல ஓடு உரிக்காமக் கெடைக்கும். அதையும் பதமா மண்டையப் பிச்சி ஓட்ட உரிச்சிருக்கோமே. அவ்வளவு எக்ஸ்பர்ட்டு. அப்படியிருக்குறப்போ நெதர்லாந்துல நல்ல தண்டித்தண்டி எறாலக் கெடச்சா சும்மா விடுவோமா?

பெரிய வெங்காயத்த எடுத்து நீளமா நறுக்கிக்கனும். பொடிப்பொடியா நறுக்கீறக்கூடாது. அப்புறம் நஞ்சு போயிரும். அடுத்தது தக்காளீன்னுதான நெனச்சீங்க. அதுதான் இல்ல. எறால்ல தக்காளி போட்டாலும் நல்லாத்தான் இருக்கும். ஆனா கொழகொழன்னு வெஞ்சனமா ஆயிரும். அதுக்கு மாத்தாத்தான் கொடமெளகா. நம்மூர்ல பச்சையா இருக்கும். இங்க செவப்பு மஞ்சளுன்னு கெடைக்குது. எதுவும் போடலாம். மலையாளத்துல எறாலுக்குச் செம்மீன்னு பேரு. அதுனால நான் செவப்புக் கொடமெளகாய எடுத்துக்கிட்டேன். நல்லா சின்னச் சின்னதா நறுக்கிக்கிறனும். வேற என்ன? வேற ஒன்னுமில்ல. அவ்வளவுதான்.

எறாலக் கழுவி எடுத்துக்கிருங்க. சட்டியக் காயவெச்சு எண்ணய ஊத்துங்க. அடுத்து என்ன செய்யனும்? கடுகு உளுந்தம் பருப்புதான? ஆனா போடக்கூடாது. கத்திரிக்கா வதக்கலா செய்யப் போறோம்! இது எறால். அதுனால எண்ண காஞ்சதும் வெங்காயத்தையும் கொடமெளகாயையும் ஒன்னாப் போட்டுறனும். போட்டு ரெண்டு கிண்டு கிண்டி வதக்கனும்.

எளம் வதக்கலா இருக்குறப்பவே எறாலையும் கூடப் போட்டுறனும். இதுல பாருங்க மஞ்சப்பொடியெல்லாம் போடக் கூடாது. ஏன்னா...என்னென்ன சேத்துருக்கமோ அதது அந்தந்த நெறத்துல அப்படியே தெரியனும். அங்கதான் இருக்கு சூக்குமம். வெங்காயம் கொடமெளகாயோட எறாலையுஞ் சேத்துப் பெரட்டனும். சொட்டுச் சொட்டாக் கூடத் தண்ணி ஊத்தக் கூடாது.

இதுல இன்னொன்னையும் கவனிக்கனும். அடுப்பு மெதம்ம்ம எரியனும். தபதபன்னு எரியவிட்டா எறா சுறாவாயிரும். மெதமா எரியும் போது மூனையும் லேசாப் பெரட்டிக்கனும். அது கூட வேண்டிய அளவுக்கு மெளகாப்பொடியும் உப்பும் மட்டும் போட்டுப் பெரட்டனும்.

எறாலுக்குன்னு ஒரு சுவையிருக்கு. மணமிருக்கு. மசாலாப்பொடிகள எக்கச்சக்கமா கலந்துட்டா அது தெரியாது. மசால நெறையத் திங்கனும்னா எறா எதுக்கு? ரெண்டு உருளைக் கெழங்கப் போட்டாப் போதாது. ஆலு லபக்தாஸ் ஆயிரலாம்ல. ஆகையால மசாலாக்களைக் கொறச்சிக்கோங்க. மெளகாப்பொடியும் உப்பும் மட்டும் போதும். ரொம்பவும் விரும்புனீங்கன்னா லேசா கரம் மசாலா போட்டுக்கோங்க. என்னையக் கேட்டா அதுவும் வேண்டாம்பேன்.

ஆக...வெங்காயம்+கொடமெளகா, எறால், மெளகாப் பொடி, உப்பு...அப்படி வரிசையாப் போட்டு பெரட்டீருக்கோம். மெதமான நெருப்பு. இப்ப தானா தண்ணி ஊறும். எறால்லயும் மெளகாய்லயும் இருக்குற தண்ணி தானா வெளிய வரும். அந்தத் தண்ணீல எறா வேகனும். அப்ப ஒரு மணம் கெளம்பும் பாருங்க. ஆகா!

வங்காளத்துல அந்தக்காலத்துல எறாலுங்குறது ஏழைபாழைக சாப்புடுறதாம். விருந்துல எறா வெச்சா அவங்க வசதி கொறஞ்சவங்கன்னு தெரிஞ்சிக்கிறலாமாம். ஆனா இன்னைக்கு எறா வெல எகிறிப் போயி...நெலம தலைகீழ். எறா விருந்து வெச்சா...அவங்க வசதி நெறஞ்சவங்கன்னு தெரிஞ்சிக்கலாம்.

சரி. நம்ம எறாவுக்கு வருவோம். எறா வெந்திருச்சுன்னு எப்படிக் கண்டுபிடிக்கிறது? நல்ல நீளமா இருக்குற எறாக்கள் வடைவடையாச் சுருண்டுக்கிரும். அப்படி நல்லாச் சுருண்டு தண்ணியெல்லாம் வத்துனப்புறமா அடுப்ப அணைச்சிற வேண்டியதுதான். ஒருவேளை வேகுறப்போ தண்ணி விடலைன்னா கொஞ்சமாச் சேத்து வேக விடுங்க. நல்லா வடைவடையாச் சுருண்டதும் தண்ணி வத்தப் பெரட்டீட்டு எறக்கீருங்க. கடைசி வரைக்கும் தீ மெதமாத்தான் இருக்கனும்.

இந்த எறாவ சோத்துல பெணஞ்சுக்கலாம். இட்டிலி தோசை சப்பாத்திக்குத் தொட்டுக்கலாம். பூரிக்கும் பெரமாதமா இருக்கும். எப்படியிருக்கும்னு தெரிய வேண்டாமா? அதுக்காகத்தான படம் போட்டிருக்கேன் கீழ.



சுவையுடன்,
கோ.இராகவன்

26 comments:

said...

இப்ப கோவிலுக்குப் போயிக்கிட்டு இருக்கோம். போயிட்டு வந்து படிச்சுப் பாக்குறேன். நாளைக்கு (ஞாயிறு) முடிஞ்சா செஞ்சு சாப்புட்டுற வேண்டியது தான். விருந்தாளிங்க வந்திருக்காங்க. வந்தவர் வீட்டுல நான் - வெஜ் சாப்புட மாட்டாங்க - அதனால சிக்கன் பிரியாணி வேணும்ன்னு கேட்டுக்கிட்டு இருக்கார். பாக்கலாம். இதையும் தொட்டுக்கச் செஞ்சுற வேண்டியது தான். :-)

said...

// குமரன் (Kumaran) said...
இப்ப கோவிலுக்குப் போயிக்கிட்டு இருக்கோம். போயிட்டு வந்து படிச்சுப் பாக்குறேன். நாளைக்கு (ஞாயிறு) முடிஞ்சா செஞ்சு சாப்புட்டுற வேண்டியது தான். விருந்தாளிங்க வந்திருக்காங்க. வந்தவர் வீட்டுல நான் - வெஜ் சாப்புட மாட்டாங்க - அதனால சிக்கன் பிரியாணி வேணும்ன்னு கேட்டுக்கிட்டு இருக்கார். பாக்கலாம். இதையும் தொட்டுக்கச் செஞ்சுற வேண்டியது தான். :-) //

2007ல சுவைக்கச் சுவைக்கல மொதப் போணி குமரன். :) கோயிலுக்குப் போயிட்டு வந்து பதிவப் படிங்க.

சிக்கன் பிரியாணி கேக்குறாரா? இதையுஞ் செஞ்சிருங்க. விரும்பிச் சாப்புடுவாரு. உறுதியாச் சொல்லலாம்.

said...

வடைவடையா சுருண்டுக்கும் :-)))))


ஜிலேபின்னு சொல்லலையா?

நெதர்லெண்டுலே இருந்து திரும்ப வரும்போது ஒரு பத்து ஸ்டார் ஹொட்டேல் chef ஆகிருவீங்க போல!

( ச்சும்மா ஒரு அஞ்சைக் கூட்டிக்கிட்டேன்)

said...

// துளசி கோபால் said...
வடைவடையா சுருண்டுக்கும் :-)))))


ஜிலேபின்னு சொல்லலையா? //

ஜிலேபின்னு சொல்லலாம். ஆனா ஜிலேபியை விட ஜாங்கிரி எனக்குப் பிடிக்கும். ஜாங்கிரிய விட கெட்டிச் சட்டினி வெச்சிக் குடுக்குற உளுந்த வடை பிடிக்கும். அதான்..ஹி ஹி...சின்ன வயசுல எறால் மீனுங்குற பேர விட வடமீனு வடமீன்னு பதிஞ்சிருச்சு. அதான்...

// நெதர்லெண்டுலே இருந்து திரும்ப வரும்போது ஒரு பத்து ஸ்டார் ஹொட்டேல் chef ஆகிருவீங்க போல!

( ச்சும்மா ஒரு அஞ்சைக் கூட்டிக்கிட்டேன்) //

ஆகா...என்ன டீச்சர் இப்படிச் சொல்லீட்டீங்க. எனக்குள்ள பத்து chefக தூங்கிக்கிட்டிருக்காங்க. ஆகையால பத்து ஸ்டார் ஓட்டல்ல கூட ஆகலாம். :)))))))))))))))

said...

ராகவா!
ஒங்க இறால் சமையலை இப்போதைக்கு சுவைக்க முடியாது. எங்கள் நல்லூர்க் கந்தன் கொடியேறிவிட்டார். 1 மாதம் சைவ உணவு. பின்பு பார்ப்போம்.
என் பஞ்சாமிர்தம் 2 பாருங்கள்.

said...

ஆஹா, சூப்பரா இரூக்கே பாக்க.

அப்படியே குத்திச் சாப்பிடலாம் போல இருக்கே. ட்ரை பண்ணிப் பாக்கரேன்.

said...

இராகவன்,
எனக்கு இறால் தெரியும். ஆனால் ஒரு நாளும் சுவைத்ததில்லை. நான் மாமிச உணவுகள் உண்பதில்லை.
:-))

ஈழத்தில் எனது ஊரும் ஒரு கரையோரக் கிராமம்தான். ஆனால் எமது ஊரில் நான் ஒரு நாளும் மீனவர்கள் இறால் பிடித்ததைப் பார்த்த ஞாபகம் இல்லை. எமது கடற்பகுதியில் இறால் இல்லையோ?!

said...

// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
ராகவா!
ஒங்க இறால் சமையலை இப்போதைக்கு சுவைக்க முடியாது. எங்கள் நல்லூர்க் கந்தன் கொடியேறிவிட்டார். 1 மாதம் சைவ உணவு. பின்பு பார்ப்போம்.
என் பஞ்சாமிர்தம் 2 பாருங்கள். //

ஆகா! நல்லூர்க் கொடியேற்றம் ஆகிவிட்டது அல்லவா. பிரபா பதிவையும் பார்த்தேன். உங்களது பஞ்சாமிர்தம் பதிவையும் பார்த்தேன். பஞ்சாமிர்தம் தொடர்பாக எனக்குத் தெரிந்ததையும் சொல்லியிருக்கிறேன். நீங்கள் அடுத்த மாதம் இதை மறவாது செய்து சாப்பிட்டு விட்டுச் சொல்லுங்கள். நானும் இறாலும் காத்திருக்கிறோம். :)

// SurveySan said...
ஆஹா, சூப்பரா இரூக்கே பாக்க.

அப்படியே குத்திச் சாப்பிடலாம் போல இருக்கே. ட்ரை பண்ணிப் பாக்கரேன். //

ஆமாங்க. அப்படியே குச்சியில குத்திச் சாப்புடலாம். நாலு சப்பாத்தி செஞ்சுக்கிட்டு வெங்காயத்த நறுக்கித் தயிர்ல போட்டு இதையும் தொட்டுக்கிட்டுச் சாப்பிட்டா...அடடா! பேசாம ஆணி புடுங்க வந்ததுக்குப் பதிலா சமைக்கப் போயிருக்கலாம். திருப்தியாவது கெடைச்சிருக்கும். :)))))))))))))

said...

அண்ணா பசிக்குது :((

said...

அண்ணா பேசமால் சிங்கப்பூரில் ஒரு வேலைத் தேடிகிட்டு வந்துடுங்க.எனக்கு சாப்பிட ஒரு இடம் கிடைத்த மாதிரி இருக்கும் :D

said...

நீங்க எழுதி நான் படிக்கும்போதே இப்படி ருசிக்குதே, நீங்க செஞ்சு நான் சாப்பிட்டா எப்படி ருசிக்கும்? ;)

எப்போ ஹைதராபாத் வருவீங்க? ;)

said...

அலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே ;-)

said...

இந்த மாதிரி பெரிய பெரிய இறாலாக இல்லாமல் சின்ன அளவில் salad shrimp என்று கிடைக்கும். நீங்கள் சொன்ன அதே வழிமுறைப்படி பெரிய இறாலுக்குப் பதில் அதை உபயோகித்தால் தொட்டுக்கொண்டு சாப்பிடும் குழம்பு வகைகளுக்கு இன்னும் பொருத்தமாக இருக்கும்.

said...

// வெற்றி said...
இராகவன்,
எனக்கு இறால் தெரியும். ஆனால் ஒரு நாளும் சுவைத்ததில்லை. நான் மாமிச உணவுகள் உண்பதில்லை.
:-)) //

ஆகா! நான் இப்பிடிச் சொல்வேன். எனக்கு நீச்சல் தெரியும். ஆனா நீந்தத் தெரியாதுன்னு. அது மாதீரில்ல நீங்க சொல்றது இருக்கு. :))))))))))))))

// ஈழத்தில் எனது ஊரும் ஒரு கரையோரக் கிராமம்தான். ஆனால் எமது ஊரில் நான் ஒரு நாளும் மீனவர்கள் இறால் பிடித்ததைப் பார்த்த ஞாபகம் இல்லை. எமது கடற்பகுதியில் இறால் இல்லையோ?! //

தெரியலையே வெற்றி. ஈழத்தார்தான் இதுக்கு விளக்கம் சொல்லனும். இருங்க கானாபிரபா வந்திருக்காரு. அவரு கிட்ட கேப்போம்.

// கானா பிரபா said...
அலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே ;-) //

பாட்டோடு வரும் ரேடியோஸ்பதியே... :) வெற்றியின் கேள்விக்கு உங்களிடம் விடையுண்டா?

said...

// துர்கா|thurgah said...
அண்ணா பசிக்குது :(( //

தாயே மலேசிய மாரியாத்தா....ஆத்தாளுக்குப் படையல் போட்டுக் கட்டுப்படியாகுமா! கருணை காட்டாத்தா! :)

// அண்ணா பேசமால் சிங்கப்பூரில் ஒரு வேலைத் தேடிகிட்டு வந்துடுங்க.எனக்கு சாப்பிட ஒரு இடம் கிடைத்த மாதிரி இருக்கும் :D //

இங்க பார்ரா....சாப்புடுறதுக்காக சிங்கப்பூருக்கு வரனுமா...இது டூ மச்சு.

// அருட்பெருங்கோ said...
நீங்க எழுதி நான் படிக்கும்போதே இப்படி ருசிக்குதே, நீங்க செஞ்சு நான் சாப்பிட்டா எப்படி ருசிக்கும்? ;)

எப்போ ஹைதராபாத் வருவீங்க? ;) //

இங்க பார்ரா...மேல ஒருத்தர் சிங்கப்பூருக்குக் கூப்டா நீ ஐதராபாத்துக்குக் கூப்புடுற. ஐதராபாத் வந்து நான் பட்ட பாடு ஒனக்குத் தெரியுந்தானே. அப்புறமும் கூப்புடுறியே!

said...

ராகவன் ,

இப்படி ஆசைய தூண்டி விடுறிங்களே, உங்க சமையல் குறிப்பு பிரமாதம் , நான் அசைவம்ல கடல் உணவை மட்டும் தான் சாப்பிடுவேன், மற்றவை உண்பதில்லை. இறால் தான் அதிகம். பீரோடு இறால் வருவல் சாப்பிட்ட போது , ஒரு நண்பர் சொன்னார் பீர் க்கு சைட் டிஷ் ஆக இறால் சாப்பிடக்கூடாது என்று. காரணம் இறால் வாயுவாம். அது உண்மையா?

said...

ராகவன் ,
easy recipe கண்டிப்பா try பண்றேன்!:)

said...

// வவ்வால் said...
ராகவன் ,

இப்படி ஆசைய தூண்டி விடுறிங்களே, உங்க சமையல் குறிப்பு பிரமாதம் , நான் அசைவம்ல கடல் உணவை மட்டும் தான் சாப்பிடுவேன், மற்றவை உண்பதில்லை. இறால் தான் அதிகம். பீரோடு இறால் வருவல் சாப்பிட்ட போது , ஒரு நண்பர் சொன்னார் பீர் க்கு சைட் டிஷ் ஆக இறால் சாப்பிடக்கூடாது என்று. காரணம் இறால் வாயுவாம். அது உண்மையா? //

வவ்வால், யாரந்த நண்பர்? :)))))))) வாயுப் பொருட்கள்ள எல்லாம் மாவுச்சத்து நெறைய இருக்கும். உருளை, வாழை அந்த மாதிரி. இறால்ல மாவுப்பொருள் கிடையாது. புரதமும் கொழுப்பு அமிலங்களும். அந்தக் கொழுப்பு கூட நல்ல கொழுப்பாம். யோசிக்காம இறாலச் சாப்பிடுங்க. பியர விட்டுறுங்க. ஹி ஹி

// kalpana said...
ராகவன் ,
easy recipe கண்டிப்பா try பண்றேன்!:) //

கண்டிப்பாங்க. செஞ்சு பாத்துட்டு எப்படி இருந்துச்சுன்னும் சொல்லுங்க.

said...

Ragavan,
iRAlukkup pathila kaththirikkaay
pottup paNNalAmA:)0

padikka nallaa irukku. en sinekithi romba nalla seyvaanga. very artful.
mudpotla seyvanga.
naanum thaLLi ninnuttup paarppen.
enga singam rasiththu rusippaar.:))))

said...

// வல்லிசிம்ஹன் said...
Ragavan,
iRAlukkup pathila kaththirikkaay
pottup paNNalAmA:)0 //

பண்ணலாம்மா. கண்டிப்பா பண்ணலாம். இதுல கத்திரிக்காயை பெருசு பெருசா வெட்டிப் போடனும். லேசா கொஞ்சம் தண்ணி தெளிச்சிக்கலாம். இல்லைன்னா உருளைக்கிழங்க பொடிப்பொடியா நறுக்கியும் போடலாம். ஆனா வேகுறதுக்குத் தண்ணி விடனும்.

// padikka nallaa irukku. en sinekithi romba nalla seyvaanga. very artful.
mudpotla seyvanga.
naanum thaLLi ninnuttup paarppen.
enga singam rasiththu rusippaar.:)))) //

ஆகா...சிங்கத்துக்கு இந்தப் பதிவைக் காட்டாதீங்க. அப்புறம் செஞ்சு தரச்சொல்லி அடம் பிடிக்கப் போறாங்க. :)

said...

இது போல நானும் செய்ததுண்டு

ப்ளஸ் basil
ப்ளஸ் எலுமிச்சை ஜூஸ் கடைசியாக

said...

நல்ல recipe.. செஞ்சுப்பாத்துட்டு இன்னும் பேசறேன்.

said...

அருமையான சமையல் குறிப்பு. வெறுமனே இதைச் சேர், அதைச் சேர், கிண்டு, கிளறு என்பதற்கு மேலே போய் ஏன் ஒன்றை ஒரு குறிப்பிட்ட விதத்தில் செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்று விளக்கியிருக்கிறீர்கள்.

இறால் மட்டுமல்ல, அநேகமாக எல்லாக் கடல் உணவு வகைகளை சமைக்கும் போதும் இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

ஒன்று மசாலாக்களை கன்னாபின்னானு தூக்கிப் போடக் கூடாது. உப்பு, மிளகு அல்லது மிளகாய்த்தூள், தேவைப்படும்போது மட்டும் மஞ்சள், கொத்துமல்லி (தனியா) தூள் ஆகியவை போதும்.

இரண்டாவது தீயை மிதமாக வைத்து, விரைவாக சமைத்து எடுத்து விட வேண்டும். சட்டியில் வைத்து வத, வதவென்று வதக்க வேண்டிய அவசியமில்லை.

இந்தக் கருத்துக்களை கணவாய் சமைப்பது பற்றிய ஒரு குறிப்பில் என்னுடைய தளத்தில் பதிந்திருக்கிறேன். காண்க: http://thabaal.blogspot.com/2007/09/blog-post_17.html.

இறால் சமைப்பதில் எனது பரிந்துரைகள்:

இறாலுக்கு பூண்டு சேர்த்தால் நன்றாக இருக்கும்.

ஓடோடு வைத்து சமைத்தால் ருசி. கொதிக்கும் நீரில் ஓடோடு இறாலை போட்டு சில நொடிகள் அரை வேக்காடாக ப்ளாஞ்ச் செய்து விட்டு சுத்தம் செய்து விட்டு பிறகு சமைக்கலாம். முழு இறாலை (தலையோடு) இப்படி செய்தால் இன்னும் ருசியாக இருக்கும். ஆனால், இதற்கு இறால் ரொம்ப ஃப்ரெஷாக இருக்க வேண்டும். உயிரோடு இருந்தால் நல்லது (ஜீவராசிப் பிரியர்கள் மன்னிக்க), அல்லது உயிர் விட்டு ஒரு மணிநேரத்துக்குள் பதப்படுத்தப் பட்டிருக்க வேண்டும்.

மீனை செதிளையும், கண்ணையும் சோதித்து வாங்குவது போல, இறாலை தலையை சோதித்து வாங்க வேண்டும். தலை உடலோடு எவ்வித இடைவெளியுமில்லாமல் சேர்ந்து இருக்க வேண்டும். தலை தொய்ந்து விட்டது என்றால் இறால் கெட்டுப் போக ஆரம்பித்து விட்டதென்று அர்த்தம்.

அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ சூப்பர் மார்க்கெட் போய் உரித்து பதப்படுத்தப்பட்ட இறால் வாங்குகிறவர்கள் இந்தத் தலை விவகாரத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நல்ல தரமான இறால்கள்தான் அங்கு அனுப்பப்படுகின்றன.

said...

சுவையான இறால் தயாரிப்பு முறையை நகைச்சுவையுடன் கலந்து கூறியிருப்பது சூப்பர்!!

ஆங்காங்கே நீங்க அள்ளித்தெளித்திருக்கும்....டிப்ஸ் அருமை!!!

said...

ராகவன், நானே செய்யலாம் போல சுலபமா இருக்கே. நன்றிங்க. வருஷத்துக்கொரு தரம்தான் சமைப்பீங்களா - அதாவது எழுதுவீங்களா :) சமையல் குறிப்பே இவ்வளவு சுவாரஸ்யமா எழுத உங்களாலதான் முடியும். ஆமா, நீங்க எந்த ஊரு? (உக்காரையையும் இன்னும் சில விஷயங்களையும் பார்த்ததும் அந்தக் கேள்வி வந்தது :)

said...

இது திடீர்-ன்னு தமிழ்மணத்தில் வந்து...
தமிழ் மணம், புத்தாண்டு மணம், எறா மணம், இறால் மணம், கம கமக்குதே! :))))

நான் இப்பவே ஆம்ஸ்டர்டாம் வாரேன்!: )