Saturday, August 18, 2007

9. குடைமிளகாய் இறால்

"எறால் வாங்கீட்டு வந்திருக்கேன். என்ன செய்றதுன்னு தெரியலை" என்று கூடத் தங்கியிருக்கும் அலுவலக நண்பன் சொன்னப்போ, "சரி நாஞ் செய்றேன்"ன்னு சொல்லீட்டேன். எறால் நமக்கென்ன புதுசா? எவ்வளவு பாத்திருக்க மாட்டோம். நம்மூர்ல ஓடு உரிக்காமக் கெடைக்கும். அதையும் பதமா மண்டையப் பிச்சி ஓட்ட உரிச்சிருக்கோமே. அவ்வளவு எக்ஸ்பர்ட்டு. அப்படியிருக்குறப்போ நெதர்லாந்துல நல்ல தண்டித்தண்டி எறாலக் கெடச்சா சும்மா விடுவோமா?

பெரிய வெங்காயத்த எடுத்து நீளமா நறுக்கிக்கனும். பொடிப்பொடியா நறுக்கீறக்கூடாது. அப்புறம் நஞ்சு போயிரும். அடுத்தது தக்காளீன்னுதான நெனச்சீங்க. அதுதான் இல்ல. எறால்ல தக்காளி போட்டாலும் நல்லாத்தான் இருக்கும். ஆனா கொழகொழன்னு வெஞ்சனமா ஆயிரும். அதுக்கு மாத்தாத்தான் கொடமெளகா. நம்மூர்ல பச்சையா இருக்கும். இங்க செவப்பு மஞ்சளுன்னு கெடைக்குது. எதுவும் போடலாம். மலையாளத்துல எறாலுக்குச் செம்மீன்னு பேரு. அதுனால நான் செவப்புக் கொடமெளகாய எடுத்துக்கிட்டேன். நல்லா சின்னச் சின்னதா நறுக்கிக்கிறனும். வேற என்ன? வேற ஒன்னுமில்ல. அவ்வளவுதான்.

எறாலக் கழுவி எடுத்துக்கிருங்க. சட்டியக் காயவெச்சு எண்ணய ஊத்துங்க. அடுத்து என்ன செய்யனும்? கடுகு உளுந்தம் பருப்புதான? ஆனா போடக்கூடாது. கத்திரிக்கா வதக்கலா செய்யப் போறோம்! இது எறால். அதுனால எண்ண காஞ்சதும் வெங்காயத்தையும் கொடமெளகாயையும் ஒன்னாப் போட்டுறனும். போட்டு ரெண்டு கிண்டு கிண்டி வதக்கனும்.

எளம் வதக்கலா இருக்குறப்பவே எறாலையும் கூடப் போட்டுறனும். இதுல பாருங்க மஞ்சப்பொடியெல்லாம் போடக் கூடாது. ஏன்னா...என்னென்ன சேத்துருக்கமோ அதது அந்தந்த நெறத்துல அப்படியே தெரியனும். அங்கதான் இருக்கு சூக்குமம். வெங்காயம் கொடமெளகாயோட எறாலையுஞ் சேத்துப் பெரட்டனும். சொட்டுச் சொட்டாக் கூடத் தண்ணி ஊத்தக் கூடாது.

இதுல இன்னொன்னையும் கவனிக்கனும். அடுப்பு மெதம்ம்ம எரியனும். தபதபன்னு எரியவிட்டா எறா சுறாவாயிரும். மெதமா எரியும் போது மூனையும் லேசாப் பெரட்டிக்கனும். அது கூட வேண்டிய அளவுக்கு மெளகாப்பொடியும் உப்பும் மட்டும் போட்டுப் பெரட்டனும்.

எறாலுக்குன்னு ஒரு சுவையிருக்கு. மணமிருக்கு. மசாலாப்பொடிகள எக்கச்சக்கமா கலந்துட்டா அது தெரியாது. மசால நெறையத் திங்கனும்னா எறா எதுக்கு? ரெண்டு உருளைக் கெழங்கப் போட்டாப் போதாது. ஆலு லபக்தாஸ் ஆயிரலாம்ல. ஆகையால மசாலாக்களைக் கொறச்சிக்கோங்க. மெளகாப்பொடியும் உப்பும் மட்டும் போதும். ரொம்பவும் விரும்புனீங்கன்னா லேசா கரம் மசாலா போட்டுக்கோங்க. என்னையக் கேட்டா அதுவும் வேண்டாம்பேன்.

ஆக...வெங்காயம்+கொடமெளகா, எறால், மெளகாப் பொடி, உப்பு...அப்படி வரிசையாப் போட்டு பெரட்டீருக்கோம். மெதமான நெருப்பு. இப்ப தானா தண்ணி ஊறும். எறால்லயும் மெளகாய்லயும் இருக்குற தண்ணி தானா வெளிய வரும். அந்தத் தண்ணீல எறா வேகனும். அப்ப ஒரு மணம் கெளம்பும் பாருங்க. ஆகா!

வங்காளத்துல அந்தக்காலத்துல எறாலுங்குறது ஏழைபாழைக சாப்புடுறதாம். விருந்துல எறா வெச்சா அவங்க வசதி கொறஞ்சவங்கன்னு தெரிஞ்சிக்கிறலாமாம். ஆனா இன்னைக்கு எறா வெல எகிறிப் போயி...நெலம தலைகீழ். எறா விருந்து வெச்சா...அவங்க வசதி நெறஞ்சவங்கன்னு தெரிஞ்சிக்கலாம்.

சரி. நம்ம எறாவுக்கு வருவோம். எறா வெந்திருச்சுன்னு எப்படிக் கண்டுபிடிக்கிறது? நல்ல நீளமா இருக்குற எறாக்கள் வடைவடையாச் சுருண்டுக்கிரும். அப்படி நல்லாச் சுருண்டு தண்ணியெல்லாம் வத்துனப்புறமா அடுப்ப அணைச்சிற வேண்டியதுதான். ஒருவேளை வேகுறப்போ தண்ணி விடலைன்னா கொஞ்சமாச் சேத்து வேக விடுங்க. நல்லா வடைவடையாச் சுருண்டதும் தண்ணி வத்தப் பெரட்டீட்டு எறக்கீருங்க. கடைசி வரைக்கும் தீ மெதமாத்தான் இருக்கனும்.

இந்த எறாவ சோத்துல பெணஞ்சுக்கலாம். இட்டிலி தோசை சப்பாத்திக்குத் தொட்டுக்கலாம். பூரிக்கும் பெரமாதமா இருக்கும். எப்படியிருக்கும்னு தெரிய வேண்டாமா? அதுக்காகத்தான படம் போட்டிருக்கேன் கீழ.



சுவையுடன்,
கோ.இராகவன்