Wednesday, December 07, 2005

முருங்கைக் கீரை அடை

கீரைகளில் இரும்புச் சத்து நிறைந்தது முருங்கைக் கீரை. உணவில் பயன்படுத்துவது மிகவும் நன்று. முருங்கைக் கீரை அடை செய்ய எளிமையான வண்ணமயமான அடை.

தேவையான பொருட்கள்
முருங்கைக் கீரை - ஒன்றரை பங்கு (கட்டின் அளவு ஊருருக்கு வேறுபடும். ஆகவே தேவையான அளவு).
துவரம் பருப்பு - ஒரு பங்கு
கடலைப் பருப்பு - ஒரு பங்கு
உளுந்தம் பருப்பு - கால் பங்கு
பச்சரிசி - அரைக்கால் பங்கு
வெங்காயம் - பெரியது ஒன்று
பச்சை மிளகாய் - தேவைக்கேற்ப
ஜீரகம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

1. பருப்புகளையும் அரிசியையும் ஒன்றாக ஊறப் போடவும். வெந்தயத்தையும் கூடச் சேர்க்கவும்.

2. முருங்கைக் கீரையை இலையிலையாக ஆய்ந்து அலசிக் கொள்ளவும்.

3. வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

4. ஊறிய பருப்பு, நறுக்கிய வெங்காயம், காம்பு நீக்கிய மிளகாய், ஆய்ந்து அலவிய கீரை, ஜீரகம், உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும். நல்ல மைப்பதத்துக்கும் அரைக்கலாம். எதக்கலும் குதக்கலுமாகவும் அரைக்கலாம்.

5. அரைத்த மாவு சற்றே பச்சை நிறத்தில் இருக்கும். அந்த மாவில் தோசை ஊற்றுவது போல சுட்டு எடுக்கவும். சுடச்சுட முருங்கைக் கீரை அடை தயார்.

இதை வெல்லம், வெங்காய்த் துவையல், தக்காளித் துவையலோடு சேர்த்துச் சாப்பிட சுவை கூடும். முருங்கைக் கீரை கிடைக்காத வேளைகளில் பொன்னாங்கன்னிக் கீரையையும் அரைக்கீரை, தண்டுக்கீரை போன்றவைகளையும் பயன்படுத்தலாம். பருப்பு நிறைய இருப்பதால் புரதச் சத்து நிறைந்த உணவு இது. பச்சை அடை என்று சொல்லியும் கீரை சாப்பிடாத குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, December 01, 2005

நெல்லிக்காய் ஜாமூன்

தேவையான பொருட்கள்
அரை நெல்லிகாய்
ஜீனி - தேவையான அளவு
ஏலக்காய் பொடித்தது - சிறிதளவு

செய்முறை
1. ஜீனியை நீரில் கரைத்து பாகு காய விடவும். சற்று நீர்க்க இருக்க வேண்டும்.
2. கழுவிய அரைநெல்லிக்காய்களை ஜீனிப்பாகில் போட்டு வேகவிடவும்.
3. நெல்லிக்காய்கள் வெந்ததும் ஏலம் போட்டு இறக்கவும்.
4. அருமையான நெல்லிகாய் ஜாமூன் தயார். அப்படியே தின்னலாம். புளிப்பும் இனிப்பும் கலந்து பிரமாதமாக இருக்கும்.

அன்புடன்,
கோ.இராகவன்

பீர்க்கங்காய் துவையல்

பீர்க்கங்காய் - ஒன்று (இளசு, சிறியது).
பொரிகடலை (பொட்டுக்கடலை) - 50 கிராம்
சின்ன வெங்காயம் - 12
பச்சை மிளகாய் - 4-5 (உறைப்பிற்கேற்ப கூட்டியும் குறைத்தும் கொள்ளலாம்)
புளி - ஒரு சின்ன வெங்காய அளவு
ஜீரகம் - இரண்டு தேக்கரண்டி
வெந்தயம் - சிறிதளவு
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - சிறிதளவு

1. பீர்க்கங்காயை கழுவி தோலோடு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

2. சின்ன வெங்காயத்தை தோலுரித்துக் கொள்ளவும்

3. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெந்தயமும் ஜீரகமும் போடவும்.

4. வெந்தயமும் ஜீரகமும் நன்றாகப் பொரியும் வேளையில் வெங்காயத்தைச் சேர்க்கவும்.

5. வெங்காயம் சற்று வெந்ததும் பீர்க்கங்காய் துண்டுகளையும் புளியையும் சேர்க்கவும். சற்று அதிகமாக சேர்த்துக் கொண்டால் புளிப்பு நன்றாக கலந்து வரும்.

6. பீர்க்கங்காய் வெந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.

7. ஆறிய பீர்க்கங்காய் கலவை, பச்சை மிளகாய், பொரிகடலை, உப்பு ஆகியவறைச் சேர்த்து அரைக்கவும். பீர்க்கங்காய் துவையல் தயார்.

அரைக்கும் பொழுது முதலில் தண்ணீர் சேர்க்கக் கூடாது. தேவைப்பட்டால் மட்டுமே சேர்க்க வேண்டும். ஏனென்றால் பீர்க்கங்காயில் தண்ணீர் இருக்கும். இந்தத் துவையல் ரசஞ் சோற்றுக்கு மிகவும் சிறந்த துணை. புளிப்பைக் கூட்டினால் இட்டிலி தோசைக்கும் நன்றாக இருக்கும். நல்லெண்ணெய் சேர்த்து சோற்றோடு பிசைந்து தின்னவும் ருசிக்கும்

அன்புடன்,
கோ.இராகவன்

கோதுமை ரவை கதம்பம்

கதம்ப சாதம் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதுவும் அது போலத்தான். கலந்த வகைகள் செய்தால் இதையும் செய்யலாம்.

கோதுமை ரவை - ஒரு கப்
பாசிப் பருப்பு - முக்கால் கப் (தோலுரித்து உடைத்தது)
பீர்க்கங்காய் - இரண்டு
வெங்காயம் - ஒன்று (பெரியது)
தக்காளி - இரண்டு (பெரியது)
பச்சை மிளகாய் - ஒன்று (நீளமானது)
சாம்பார் பொடி - தேவையான அளவு
மள்சள் பொடி - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்துமல்லி இலை - சிறிதளவு. தூளாக நறுக்கியது. (மேலே தூவ)
உப்பு - தேவையான அளவு

1. பீர்க்கங்காயை தோல் நீக்கி, சற்று பெரிய வட்ட வில்லைகளாக நறுக்கிக் கொள்ளவும்.

2. வெங்காயத்தையும் தக்காளியையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

3. குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுந்தம் பருப்பு போடவும். வெடித்ததும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். சிறிது மஞ்சள் தூளைச் சேர்க்கவும். பிறகு தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.

4. அத்தோடு தேவையான அளவு சாம்பார் பொடியும் உப்பும் கலக்கவும்.

5. கலந்தபின் பீர்க்கங்காய் துண்டுகளைச் சேர்க்கவும். லேசாக இரண்டு முறை புரட்டி விட்டு கோதுமை ரவையையும் பாசிப் பருப்பையும் சேர்க்கவும்.

6. ஒன்றுக்கு ஒன்றே முக்கால் அல்லது இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடவும்.

7. இரண்டு மூன்று விசில்களுக்கு விடுங்கள். ஆவி போனதும் (குக்கரில், செய்கிறவர் ஆவியல்ல) திறந்து மல்லித்தூள் தூவி பரிமாறவும்.

புதுமையாகவும் நன்றாகவும் இருக்கும். பரிமாறுகையில் மேலாக நல்லெண்ணெய் விட்டுக்கொள்ளலாம். பீர்க்கங்காயிற்கு மாற்றாக வேறு காய்கறிகளும் போட்டு முயன்று பார்க்கலாம். ஆனால் பீர்க்கங்காய்தான் மிகவும் சிறப்பு. பீட்ரூட் கலக்கலாம். கதம்பம் சற்று சிவப்பாகவும் இருக்கும். பூசணிக்காயும் நன்றாக இருக்கும்.

தொட்டுக்கொள்ள வடகம் சிப்ஸ் ஆம்லெட் போன்றவை நன்றாக இருக்கும்.

இந்தக் கதம்பத்தின் சிறப்பம்சமே இதை சர்க்கரை நோயாளிகளும் யோசிக்காமல் வெட்டலாம். அரிசி அறவே கிடையாது. ஆனால் சுவையும் அபாரம்.

அன்புடன்,
கோ.இராகவன்