Wednesday, February 15, 2006

உக்கரை மேலொரு அக்கறை

உக்கரை தெரியுமா உங்களுக்கு? செட்டிநாட்டுச் சட்டிகளையும் ஐயர் வீட்டு அடுப்புகளையும் கேட்டால் தெரியும் உக்கரையின் பெருமை.

உருவத்தையும் சுவையையும் வைத்துப் பார்த்தால் புட்டப்பனுக்கும் கேசரியம்மாளுக்கும் பிறந்த குழந்தை என்று தெரிகிறது. மெத்து மெத்தென்று புட்டுப் போல உதிரி உதிரியாக இருக்கும். கேசரிக்கும் கொஞ்சம் அடர்ந்த நிறத்தில் இருக்கும் உக்கரையை கொஞ்சமாக மூன்று விரல்களால் கிள்ளி வாயில் போட்டால்....அடடா!

உக்கரை விஷயத்தில் மட்டும் யாகாவாராயினும் நாகாக்கக் கூடாது. விவேகாநந்தரின் வாயில் ராமகிருஷ்ணர் வெல்லக் கட்டியை வைத்தாராம். அரைமணி நேரம் கழித்து வாயைத் திறக்கச் சொன்னால் முழு வெல்லக் கட்டி அப்படியே இருந்ததாம். வெல்லக் கட்டிக்குப் பதிலாக கொஞ்சம் உக்கரையை வைத்தால் விவேகாநந்தர் தோற்றிருப்பார் என்பதில் ஐயமேயில்லை.

லட்டு, பூந்தி, அல்வா போல இது தித்திப்பு மிகுந்த பண்டமும் அல்ல. ஆனால் இனிப்புப் பண்டம். அளவான இனிப்பு. அதனால்தான் கிள்ளித் தின்பதை விட அள்ளித் தின்பது பெருஞ் சுகம். இனிப்புப் பண்டங்களைக் கொஞ்சம் அதிகமாக தின்றுவிட்டால் திகட்டும். அந்தப் பேச்சே உக்கரையிடம் கிடையாது. நாக்குக்கு ரொம்பவும் அக்கறையாக இருப்பதால் இன்னொரு கரண்டி என்றுதான் கேட்கச் சொல்லும்.

தோள் கண்டார் தோளே கண்டார். இது கம்பன் வாக்கு. உக்கரை உண்டார் உக்கரையே உண்டார். இது இந்த வம்பன் நாக்கு...அல்லது வாக்கு.
இவ்வளவு சொல்லியாகி விட்டது. உக்கரையைச் செய்வது எப்படி என்று சொல்ல வேண்டுமே! நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது அடியேனுடைய விருப்பம். மேலும் உக்கரையின் மகிமையை எடுத்துச் சொல்லி அதன் புகழைப் பரப்பினால் பிறவிப் பெருங்கடலில் இக்கரையிலும் அக்கரையிலும் உக்கரைக் கரையாகக் கொடுப்பான் என்று உக்கரையாகப் பரணியில் சொல்லியிருக்கின்றது.

பச்சரிசியும் தோல் நீக்கிய பாசிப்பருப்பும் சரிக்குச் சமமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதிலிருந்து உக்கரையின் சமதர்ம எண்ணம் நமக்குத் தெளிவாக விளங்குகிறது.

இரண்டையும் தனித்தனியாக நன்றாக நீரில் கழுவி நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். நன்றாக உலர்ந்த பிறகு வெற்று வாணலியில் இளஞ்சூட்டில் தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். இங்குதான் கவனமாக இருக்க வேண்டும். வறுக்கிறேன் என்று கருக்கி விடக் கூடாது. தெரிகிறதா. இதமாகவும் பதமாகவும் பச்சை வாடை போக வறுத்தால் போதும். ரொம்பவும் வறுத்த அரிசையையும் பருப்பையும் போட்டால் நாக்கை வருத்தத்தான் பண்டம் கிடைக்கும். உக்கரை கிடைக்காது.

வறுத்தவைகளை ஆற வைத்து மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும். மிக்சி இருப்பவர்கள் மிக்சியில். கல்லுரலும் உலக்கையும் இருப்பவர்கள் அதிலேயே இடித்துக் கொள்ளலாம்.

இட்டிலிக் கொப்பரையில் இட்டிலி மாவிற்கு பதிலாக இந்த மாவை வைத்து ஆவியில் வேக வைக்க வேண்டும். புட்டுக்கு வேக வைப்பது போல. ஆனால் நீர் ஊற்றிப் பிசையக் கூடாது. உலர்ந்த மாவை அப்படியே வேகவைக்க வேண்டும்.

வெந்த மாவை நன்றாக உதிர்த்து ஆற வைத்துக் கொள்ளவும். வெல்லப் பாகை காய்ச்சி, நன்றாக காய்ந்து வரும் பொழுது வெந்த மாவை அதனோடு சேர்த்துக் கிளற வேண்டும். மாவு குறைவாகப் போனால் கொளகொளவென கேசரி போல ஆகிவிடும். கிளறும் பொழுதும் மாவு உதிரியாக இருக்க வேண்டும். வெல்லப் பாகும் மாவும் கலந்து நன்றாக உதிரியாக இருக்கையில் லேசாக நெய் விட்டு ஏலக்காய்ப் பொடி தூவி இறக்கி வைக்கவும். சுவையான உக்கரை தயார்.

உக்கரையைச் சுடச்சுடச் சாப்பிடக் கூடாது. ஆறிய பிறகு தட்டில் வைத்து கையால் எடுத்துச் சாப்பிட வேண்டும். ஸ்பூனில் எடுத்துச் சாப்பிட்டால் உக்கரையின் மெத்துமை கைகளுக்குத் தெரியாமல் போய்விடும். அழுத்தி எடுக்கக் கூடாது. பஞ்சுமிட்டாயைப் பதமாகப் பிய்க்கிற மாதிரி தனக்கு வலிக்குமோ உக்கரைக்கு வலிக்குமோ என்று எடுத்து வாயில் போட்டுக் கொள்ள வேண்டும்.

உக்கரையின் சுவையை உண்டர் விண்டிலர். விண்டவர் உண்டிலர் என்பதே உண்மை. நீங்களும் உக்கரையினை அக்கறையோடு செய்து உண்டு அதன் பலன்களை உக்கரையாகப் பரணியில் சொல்லியிருக்கும்படி அடைந்து வாழுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,
கோ.இராகவன்

31 comments:

said...

//பச்சரிசியும் தோல் நீக்கிய பாசிப்பருப்பும் //

பாசிப்பருப்பா? இல்லை பாசிப்பயறா?

இங்க உக்கரை நல்லாத்தான் இருக்கு!

said...

// பாசிப்பருப்பா? இல்லை பாசிப்பயறா? //

தங்கமணி, பாசிப்பருப்புன்னா ஒடச்சது. ஒடச்சி தோல் நீக்கீருக்கனும். அதைத்தான் போடனும். தோலோடு போடக்கூடாது. செஞ்சி பாருங்க. நல்லா இருக்கும்.

said...

ராகவன்,
நீங்கள் எழுதியுள்ள விதம் நாவில் நீர் சுரக்க வைத்துவிட்டது. ஒரு நாள் செஞ்சு பார்க்கணும். Jsri ஜங்க் பாஷையில் எதோ சொல்லியிருக்காங்க...என்னன்னு உங்களுக்காச்சும் புரியுதா? எனக்கு புரியலை.

said...

// ராகவன், நீங்க யாரோ, எந்த ஊரோ (யார் பெத்த பிள்ளையோ), உக்கரைக்கு இப்படிக் குறிப்பு சொல்லியிருக்கீங்க. [அரிசி சேர்க்கணுங்கற உங்க குறிப்பைப் பார்த்து நெஞ்சு பொறுக்குதில்லையே.. :( அதுக்கும் மேல உக்காரையை உக்கரைன்னு குறைச்சு வேற சொல்றீங்க. :((] //

நல்லா வேணும் ராகவா...நல்லா வேணும்.

நீங்க யாரோ எவரோ! ஏதாவது தப்பா இருந்தா மன்னிசிகிருங்க. எனக்குத் தெரிஞ்சத சொன்னேன். அவ்வளவுதாங்க.

// ஆனா நாங்க பர்ரம்பரை பர்ரம்பரையா..(அதே ஊர் நாட்டாமை தொனிதான்) நவராத்திரி வெள்ளிக்கிழமைக்கும், தீபாவளிக்கும் உக்காரை செஞ்சு ஊருக்கெல்லாம் கொடுக்கறவங்க. //

ஆகா! அப்ப நீங்க உக்கரைத் தேவன் பரம்பரையா (சக்கரைத் தேவன் மாதிரி)

// நீங்க சொன்ன குறிப்பு சொன்னதாவே இருக்கட்டும். ஆனாலும் அதோட தம்பி 'சீயாளனோ'ட நான் மரத்தடிக் குழுமத்துல திஸ்கில எழுதினதை இங்கயும் தரேன். [அது ஏதோ இலக்கியக் குழுவாமே; அதனால அங்க சமையல் குறிப்புக்கெல்லாம் 'நோ' சொல்லிட்டாங்க. :((] கடிதம் எடிட் செய்ய எல்லாம் நேரம் இல்லை. அப்படியே போடுங்க. பின்னூட்டத்தை பதிவு சைஸ்ல போட்டுத்தான் எனக்கும் பழக்கம். //

குடுங்க. குடுங்க. நம்ம மக்களுக்குக் கண்டிப்பா பயனுள்ளதா இருக்கும்.

said...

// ராகவன்,
நீங்கள் எழுதியுள்ள விதம் நாவில் நீர் சுரக்க வைத்துவிட்டது. ஒரு நாள் செஞ்சு பார்க்கணும். Jsri ஜங்க் பாஷையில் எதோ சொல்லியிருக்காங்க...என்னன்னு உங்களுக்காச்சும் புரியுதா? எனக்கு புரியலை. //

கைப்புள்ள, ஜெச்ரி சொன்னதை டீகோடு செஞ்சி, அதுக்கு பதிலும் போட்டிருக்கேனே. அதுவும் இல்லாம அவங்க ஊரு உக்காரை செய்முறையும் சொல்லீருக்காங்க. அதையும் பாருங்க.

said...

//பச்சரிசியும் தோல் நீக்கிய பாசிப்பருப்பும் சரிக்குச் சமமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.//-G.Ragavan (வம்பன்!)

//அரிசி சேர்க்கணுங்கற உங்க குறிப்பைப் பார்த்து நெஞ்சு பொறுக்குதில்லையே.. // - Jsri



ராகவா... திரும்பவும் நான் கேக்குறேன்...

நல்லா... யோசிச்சு... நெதானமா... பதறாம... பதில் சொல்லனும்!

மெய்யாலுமே... நீங்க இந்த 'உக்காரை' செஞ்சு சாப்டீங்களா?!

அத பச்சரிசி போட்டுத்தாஞ் செஞ்சீங்களா?!



சரியானதொரு பண்டத்திற்கு, ராகவன் செய்முறை விளக்கம் கொடுக்கிறாரென்றால் அதைகண்டு சந்தோஷப்படும் முதல் மனிதன் நாந்தான்!

ஆனால் அதே சமயம்,...

ஒரு பண்டத்தின் காலை உடைத்து (உக்கரை/உக்காரை!), பச்சரிசி போட்டுச் செய்முறை விளக்கம் கொடுக்கிறாரென்றால் அதைக் கண்டு வருத்தப்படும் முதல் மனிதனும் நாந்தான்!!

ஐயகோ... என்ன இது உக்காரைக்கு வந்த சோதனை!!!

எனக்கு இட்லி வடை ரொம்ப பிடிக்கும்!

said...

உக்கரை விஷயத்தில் மட்டும் யாகாவாராயினும் நாகாக்கக் கூடாது. விவேகாநந்தரின் வாயில் ராமகிருஷ்ணர் வெல்லக் கட்டியை வைத்தாராம். அரைமணி நேரம் கழித்து வாயைத் திறக்கச் சொன்னால் முழு வெல்லக் கட்டி அப்படியே இருந்ததாம். வெல்லக் கட்டிக்குப் பதிலாக கொஞ்சம் உக்கரையை வைத்தால் விவேகாநந்தர் தோற்றிருப்பார் //

அதெப்படித்தான் ஒவ்வொரு தர பதிவுக்கும் ஒரு பொருத்தமான நிகழ்ச்சிகளை அவுத்து விடறீங்களோ..

ரொம்ப சூப்பர உங்க உக்கரை.. ஆனா என்ன எனக்கு உடம்புலயே நிறைய ஜீனி இருக்குதாம். இனிப்புன்னாலே அலர்ஜி..

ஹூம்.. னு சொல்லத்தான் முடியும்.. :-((

அதுசரி.. எங்க வீட்டுக்கு பக்கமே காணோம்.. அலுத்துப் போச்சோ.. சும்மா தமாஷ்.. ரொம்ப பிசியா இருக்கீங்கன்னு நினைக்கிறேன்.

jsri வேணும்னே புரியாத பாஷையில எழுதியிருக்காரோ என்னவோ.. டோண்டு சார் கேட்டா தெரியும் இது என்ன பாஷைன்னு!

said...

// ராகவா... திரும்பவும் நான் கேக்குறேன்...

நல்லா... யோசிச்சு... நெதானமா... பதறாம... பதில் சொல்லனும்! //

அய்யோ ஞான்ஸ், இப்படிக் கேட்டுடீங்களே! இது வரைக்கும் நான் போட்ட குறிப்பு எல்லாம் என்னுடைய ருசி அறிந்ததே! ஐயம் வேண்டாம்.

// மெய்யாலுமே... நீங்க இந்த 'உக்காரை' செஞ்சு சாப்டீங்களா?!

அத பச்சரிசி போட்டுத்தாஞ் செஞ்சீங்களா?! //

ஆனால் உக்கரையை நான் செய்து பார்த்ததில்லை. பல இடங்களில் சபிட்டு இருக்கிறேன். செய்முறையை தேவனின் அப்பளக் கccஏரி என்ற புத்தகத்திலிருந்து எடுத்தேன். தேவன் தப்பா சொல்ல மாட்டார் என்ட்ற நம்பிக்கைதான்.

// சரியானதொரு பண்டத்திற்கு, ராகவன் செய்முறை விளக்கம் கொடுக்கிறாரென்றால் அதைகண்டு சந்தோஷப்படும் முதல் மனிதன் நாந்தான்!

ஆனால் அதே சமயம்,...

ஒரு பண்டத்தின் காலை உடைத்து (உக்கரை/உக்காரை!), பச்சரிசி போட்டுச் செய்முறை விளக்கம் கொடுக்கிறாரென்றால் அதைக் கண்டு வருத்தப்படும் முதல் மனிதனும் நாந்தான்!! //

இதெல்லாம் உக்கரையின் மேல் இருக்குற அக்கறைன்னு புரிஞ்சிக்கனும்.

said...

என்னைகு இப்படி ஒரு பிரசனை வந்துருச்சோ....வர்ர சண்டே இதை செஞ்சு பாதுர வென்டியதுதான்.

said...

// ரொம்ப சூப்பர உங்க உக்கரை.. ஆனா என்ன எனக்கு உடம்புலயே நிறைய ஜீனி இருக்குதாம். இனிப்புன்னாலே அலர்ஜி..//

ஆகா! ஜோசப் சார். நீங்களும் ஜீனீன்னுதான் சொல்லுவேஙள! நாங்களும் ஜீனீன்னுதான் சொல்லுவொம். என்ன இருந்தாலும் ஒரு ஓர் ஆச்சே!

// ஹூம்.. னு சொல்லத்தான் முடியும்.. :-(( //
இந்த பக்குவத்துல குறை இருக்காம். அதை சரி பன்னனும் சார்.

//அதுசரி.. எங்க வீட்டுக்கு பக்கமே காணோம்.. அலுத்துப் போச்சோ.. சும்மா தமாஷ்.. ரொம்ப பிசியா இருக்கீங்கன்னு நினைக்கிறேன்.//

கொஞ்சம் வேலை சார். அதான். இன்னைகு தான் கொஞ்சம் ஃபிரீயா ஆச்சு

said...

சமையலிலும் ஜொலிக்கிறீர்கள் ராகவன்.

வாழ்த்துக்கள்.

said...

// சமையலிலும் ஜொலிக்கிறீர்கள் ராகவன்.

வாழ்த்துக்கள். //

படித்துப் பாராட்டியமைக்கு நன்றி மூர்த்தி அண்ணா.

said...

// சும்மாவே நான் இனிப்புனா உயிரவிடுவேன்... நீங்க சொன்னவிதம் வேற நாக்குல தண்ணிவருது.. //

நன்றி ஆர்த்தி. ஆனா இதுல குத்தம் இருக்குதாம். நான் வர்ர வாரக்கடைசீல நான் எழுதீருக்குற மாதிரி செஞ்சி பாக்கப் போறேன். நான் சாப்பிட்ட ருசி வந்துச்சுன்னா சரி. இல்லைன்னா...ஜெஸ்ரீ சொன்ன குறிப்பைச் செஞ்சு பாக்கனும். அவங்க சொன்னது நிச்சயமா நல்லாத்தான் இருக்கனும். நெறைய வாட்டி செஞ்சிருக்காங்களாம்.

said...

//தேவனின் அப்பளக் கccஏரி என்ற புத்தகத்திலிருந்து எடுத்தேன். தேவன் தப்பா சொல்ல மாட்டார் என்ட்ற நம்பிக்கைதான். // - G.Ragavan (வம்பன்!)

பரலோக ராஜ்யம் உங்களுடையது!

:-)

said...

//உக்கரை//

ராகவன். இப்படிக் காலை ஒடச்சுட்டீங்களே! அது உக்காரை!

அரிசியெல்லாம் போட்டா அது குழாப்புட்டு ஆயிடும்.

Jsri.. சொன்னது உக்(காரை)மார்க் ஒரிஜினல் ரெசிப்பி!

என்ஸாய்!

said...

பாசிப்பயறு

said...

வழக்கம் போலக் கலக்கிப்புட்டீங்க.
எங்கள மாதிரி பேச்சுலர் பசங்க எளிதாச் செஞ்சு சாப்பிடற மாதிரி எதுனா போடக்கூடாதா??

said...

////தேவனின் அப்பளக் கccஏரி என்ற புத்தகத்திலிருந்து எடுத்தேன். தேவன் தப்பா சொல்ல மாட்டார் என்ட்ற நம்பிக்கைதான். // - G.Ragavan (வம்பன்!)

பரலோக ராஜ்யம் உங்களுடையது!
:-) //

தேவனே என்னைப் பாருங்கள்
என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள்
ஆயிரம் நன்மை தீமைகல்
அதை நீங்கள் அறிவீர் மன்னித்தருள்வீர்
oh! lord please answer my prayer!

said...

// ராகவன். இப்படிக் காலை ஒடச்சுட்டீங்களே! அது உக்காரை!

அரிசியெல்லாம் போட்டா அது குழாப்புட்டு ஆயிடும்.

Jsri.. சொன்னது உக்(காரை)மார்க் ஒரிஜினல் ரெசிப்பி!

என்ஸாய்! //

விளக்கத்திற்கு மிக்க நன்றி சுந்தர். ஜெச்ரி சொன்னதயே செஞ்சிருவொம். :-)

said...

// பாசிப்பயறு //

வளந்தவரே! என்ன சொல்ல வாரேங்க? ஏதாவது தப்பா எழுதீருக்கேனா? அப்படி இருந்தா வெளிப்படையா சொல்லீருங்க. சரி பண்ணிக்கிறேன்.

said...

// வழக்கம் போலக் கலக்கிப்புட்டீங்க.
எங்கள மாதிரி பேச்சுலர் பசங்க எளிதாச் செஞ்சு சாப்பிடற மாதிரி எதுனா போடக்கூடாதா?? //

சுதர்சன். நெறையா இருக்கு. ஆனா ஒரு ரெண்டு மாசம் பொறுக்கனும். அப்புறமா ஒரு டிஜிட்டல் கேமரா வாங்கி நான் செஞ்சதை படம் பிடிச்சிப் பொட்டு தான் குரிப்பு கொடுக்க போறேன்.

said...

பக்கரை விசித்ரமணி திருப்புகழ் பாட்டுக்கு உரை எழுதும் ராகவனா உக்கரையிலும் அக்கரைகாட்டி எழுதுகிறது.அக்கரை செய்வதிலும் தமிழ் அக்கறையுடன் விளையாடுகிறது.இந்த மாதிரி இனிப்பு செய்முறையெல்லாம் எழுதி என்னைப்போன்ற இதயமுள்ளவர்களின் (இருப்பதால்தானே கஷ்டம் வருகிறது)சாபத்துக்கு ஆளாகாதீர்கள்.தி ரா ச

said...

செஞ்சு பாத்துட்டீங்களா? எது சரி? நானும் நீங்க சனிக்கிழமையே சொல்வீங்க, சன்டே சமையலா பண்ணிடலாம்னு நினைச்சேன்...

said...

சமயல் குறிப்பு நல்லா இருக்கு... சமச்சா சாப்பிடலாமா?

said...

// செஞ்சு பாத்துட்டீங்களா? எது சரி? நானும் நீங்க சனிக்கிழமையே சொல்வீங்க, சன்டே சமையலா பண்ணிடலாம்னு நினைச்சேன்... //

பொன்ஸ் டிஜிடல் கேமரா வாங்காம எந்தக் குறிப்பும் போடப் போறதில்லை. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு :-)

said...

// சமயல் குறிப்பு நல்லா இருக்கு... சமச்சா சாப்பிடலாமா? //

செந்தூரன்....இந்தக் குறிப்பைத் தவிர மத்த எல்லாக் குறிப்புகளையும் கண்டிப்பா செஞ்சி சாப்பிடலாம்.

said...

ராகவன்,
என்ன அருமையா எழுதியிருக்கீங்க!
செஞ்சு பார்த்துடுவோம்..அப்புறம் எங்க ஊருலயும் 'சீனி' தாம்பா!

said...

ராகவன்
குமரன் வலைப்பூவில்
//தீந்தமிழ் நூல் அது. நக்கீரர் கள்ளர் (தேவர்) குலத்தைச் சேர்ந்தவர். கொஞ்சம் ஆத்திரக்காரரும் கூட. குகையில் அடைபட்டுக் காப்பாற்றப்பட வேண்டிய சூழலில் இறைவனை எப்படிக் கூப்பிடுகிறறர் தெரியுமா?//
இதற்கான ஆதாரங்கள் உள்ளனவா எப்படி சொல்கிறீர்கள் நா.மு.வேங்கடசாமி நாட்டார் எப்படி இவரை விட்டார். www.ennar.blogspot.com ல் எழுதிவருகிறேன் இதைப்பற்றி தற்போது தான் தெரிந்து கொண்டேன் கொஞ்சம் விளக்கம் கொடுக்க முடியுமா. திருமங்கையாழ்வாரும் மேற்படியாரே மற்றும் பலர் வருகின்றனர்

said...

எங்க ஊர் அருகில் "உக்கரை" என்கிற பெயரில் ஒரு கிராமமே இருக்கிறது.

=இஸ்மாயில் கனி
கும்பகோணம்

said...

ஆஹா ராகவன் உக்காரை யெல்லாம் பத்தி அமர்களமா எழுதியிருக்கீங்களே. இப்பத்தானே பாத்தேன். எங்கம்மாவும் இதே மாதிரி தான் செய்வாங்க. அரிசி மாவு போடுவாங்க. குத்தரசி (செகப்பு) புட்டுக்கே நான் பைத்தியம். உக்காரைக்கு கேக்கவே வேண்டாம் - அடிமையே தான்! ஆஹா இப்பவே செய்யணும் போலிருக்கே! அருமையா எழுதியிருக்கீங்க.

said...

My mom cooks it well Now i really want to have it :(